search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    தடுப்பூசி செலுத்தாத பணியாளர்களின் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

    தடுப்பூசி செலுத்தாத கடை ஊழியர்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என்று ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும் வைரஸ் கட்டுக்கடங்கவில்லை. நேற்றைய பரிசோதனை முடிவுகளில் 453 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
    திருச்சி மாநகராட்சியை பொறுத்தமட்டில் நடப்பு மாதத்தில் கோ. அபிஷேகபுரம் கோட்டத்தில் மட்டும் 834 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அரியமங்கலம் கோட்டத்தில் 216 பேருக்கும், பொன்மலையில் 577 பேருக்கும், ஸ்ரீரங்கத்தில் 472 பேரும் பாதிக்கப்பட்டனர்.
     
    தற்போதைய நிலையில் மாநகர பகுதிகளில் 1,905 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புறநகரில் பாதிக்கப்பட்ட 757 பேரில் 629 பேர் வீட்டு தனிமையிலும், மற்றவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவனைகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

    திருச்சியில் கொரோனா வைரஸ் தாக்கிய ஒருவர் நேற்று உயிரிழந்தார். இந்த மாவட்டத்தில் இதுவரை 82 ஆயிரத்து 947 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 1,106 பேரின் உயிரை கொரோனா பறித்துவிட்டது.  


    தற்போது பொங்கல் பண்டிகை முடிவுக்கு வந்துவிட்டதால் திருச்சி மாநகரில் கொரோனா விதிமீறலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார். இதுபற்றி மேலும் அவர் கூறும்போது, 

    திருச்சி மாநகரில் அதிக தொற்றுகள் ஏற்பட்டாலும் உயிரிழப்புகள் குறைவாக உள்ளன. இதற்கு தடுப்பூசியே காரணம். ஆகவே தடுப்பூசி செலுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். பொங்கல் பண்டிகை நிறைவுபெற்றுள்ளதால் கொரோனா விதிமீறல்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    இந்த மாநகராட்சியில் கடந்த   15 நாட்களில் மட்டும் விதிமீறலுக்காக ரூ. 73 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்பட்டது. 4 மண்டலங்களிலும் கொரோனா விதிமீறலை கண்காணித்து அபராதம் விதிக்க தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


    இந்த குழுவினர் விதிமீறலுக்கு அபராதம் விதிப்பதுடன் வர்த்தக நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா? என்பதையும் ஆய்வு செய்வார்கள்.

    இதில் மருத்துவ காரணம் இல்லாமல் தடுப்பூசி போடாமல் இருந்தால் அவர்களுக்கு உடனே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்வழங்கப்படும் என்றார்.  
    Next Story
    ×