என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவாடானை அருகே கபடி போட்டி நடத்துவதில் கோஷ்டி மோதல்- பெண் உட்பட 6 பேருக்கு கத்திக்குத்து
ஆர்.எஸ்.மங்கலம்:
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தொண்டி-புதுக்குடி மீனவ கிராமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு அனுமதியின்றி கபடி போட்டி நடந்தது. அப்போது இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
இதில் ஒருவருக்கொருவர் கட்டையால் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் இரு தரப்பிலும் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் தொண்டி போலீசார் விரைந்து சென்று கோஷ்டி மோதலில் ஈடுபட்ட இரு தரப்பைச் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் மீண்டும் அதே மீனவ கிராமத்தில் இன்று கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை கத்தியால் குத்தினர். இந்த சம்பவத்தில் பெண் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
மோதல் தொடர்பாக அந்த கிராமத்தில் பதட்டம் உருவானது. இதனை தொடர்ந்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவின்பேரில் திருவாடானை டி.எஸ்.பி. ஜான்பிரிட்டோ தலைமையில் போலீசாரும், அதிவிரைவுப்படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்தி ஜானகி, நாகவள்ளி, பஞ்சவர்ணம் மற்றும் நல்லேந்திரன், மகேந்திரன், கஜேந்திரன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான முனீஸ்வரன், நந்தா ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோஷ்டி மோதல் சம்பவத்தால் மீனவ கிராமம் முழுவதும் அதிவிரைவுப்படையினர் குவிக்கப்பட்டதால் அந்த பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது..