என் மலர்
உள்ளூர் செய்திகள்

களையிழந்த கடைவீதிகள்
திருச்சியில் களையிழந்த கடைவீதிகள்
திருச்சியில் 2 நாட்களாக அறிவிக்கப்படாத ஊரடங்குபோல், கடைவீதிகள் களையிழந்து காணப்படுகின்றன
திருச்சி:
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விழாக்கள், வழிபாட்டு தலங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வழக்கமாக பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் வைபவம் முடிந்ததும் புராதன கோவில்களுக்கு சென்று சாமிதரிசனம் செய்வார்கள். பூங்காக்களில் முகாமிடுவார்கள். புது திரைப்படம் வெளியானால் தியேட்டர்களுக்கு சென்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.
ஆனால் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வழிபாட்டு தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வெளியே வரவே இல்லை. திருச்சி மத்திய பஸ்நிலையம், சத்திரம் பஸ்நிலையம், ஸ்ரீரெங்கம், மலைக்கோட்டை, பெரிய கடைவீதி, என்.எஸ்.பி. ரோடு உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
பகலில் சாலைகளில் வாகனங்களை பார்க்கவே இயலவில்லை. பயணிகள் இல்லாமல் பஸ்கள் சுற்றித்திரிந்தன. ஒரு சில இளைஞர்கள் மட்டும் இரு சக்கர வாகனங்களில் பவனி வந்தனர். அவர்களும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் போனதால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
நேற்றைய தினம் மாநகரில் உள்ள 70 சதவீத கடைகள் பூட்டிக்கிடந்தன. பெரிய நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.
இன்று பெரியசூரியூர் ஜல்லிக்கட்டிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. இதுபோன்ற சூழல்களால் நேற்றைய நிலையே இன்றும் (சனிக்கிழமை) நீடிக்கிறது. ஆகவே திருச்சியில் 2 நாட்களும் அறிவிக்கப்படாத ஊரடங்கு போல சாலைகள் வெறிச்சோடின. நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது
Next Story