என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழக்கு
    X
    வழக்கு

    வேலைக்கார பெண் மீது வெந்நீர் ஊற்றிய கொடுமை - தோட்டத்து உரிமையாளர் மீது வழக்கு

    சேலம் அருகே வேலைக்கார பெண் மீது வெந்நீர் ஊற்றிய சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள வேடப்பட்டியை சேர்ந்தவர் முத்து. இவருடைய மனைவி செல்லம்மாள் (வயது 55).

    இவர் அதே பகுதியை சேர்ந்த கண்ணுபையன் (65)- ஜெயம்மாள் (55) தம்பதிக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். அவர் மீது உரிமையாளர் ஜெயம்மாள் கொதிக்கும் வெந்நீரை ஊற்றி காயப்படுத்தினார்.

    இது குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயம்மாளை கைது செய்தனர். ஜெயம்மாள் மற்றும் இவரது கணவர் கண்ணுபையன் ஆகியோர் மீது எஸ்.சி.- எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம், மோசடி, ஆபாசமாக திட்டுதல், மிரட்டுதல் என்பது உள்பட 16 பிரிவுகளில் வழக்கு பாய்ந்தது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    இதில் ஜெயம்மாள் எதற்காக செல்லம்மாள் மீது வெந்நீரை ஊற்றினார் ? என்பது பற்றி திடுக்கிடும் தகவல் போலீசாருக்கு கிடைத்தன. அதன் விபரம் வருமாறு:-

    கண்ணுபையனுக்கு சொந்தமான தோட்டத்தில் கூலி வேலை செய்தபோது செல்லம்மாளுக்கு குறைந்த அளவே சம்பளம் வழங்கப்பட்டது. இந்த சம்பளத்தில் செலவு போக மீதி இருக்கும் பணத்தை அவர் எதிர்கால தேவைக்காக கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைத்தார்.

    இந்த பணத்தை சிலர் கடனாக தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் தன்னிடம் பணம் கையில் இருந்தால் செலவாகி விடும் என நினைத்து செல்லம்மாள் இந்த சேமிப்பு பணத்தையும், தான் வேலைக்கு சேரும் முன் சேர்த்து வைத்த பணத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.4 லட்சம் மற்றும் 5 பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை கண்ணுபையன்- ஜெயம்மாளிடம் பத்திரமாக வைக்கும்படி கொடுத்து வைத்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நாட்கள் செல்ல செல்ல தோட்டத்தில் கடுமையான வேலையை வழங்கினர். மேலும் நீண்ட நேரம் வேலை செய்யுமாறு கூறினர். இதனால் சம்பளத்தை உயர்த்தி தருமாறு செல்லம்மாள் கேட்டார். அதற்கு முடியாது என கூறினர்.

    இருப்பினும் தோட்டத்தில் தொடர்ந்து சிறிது காலம் வரை வேலை செய்து விட்டு செல்லம்மாள் நின்று கொண்டார். இதையடுத்து செல்லம்மாள், தான் ஏற்கனவே கொடுத்த பணம், நகையை கண்ணுபையன் வீட்டுக்கு சென்று திருப்பி கேட்டார். அதற்கு கண்ணுபையன் -ஜெயம்மாள் ஆகியோர் நாங்கள் உன்னிடம் இருந்து நகை- பணம் வாங்கவில்லை என கூறினர். இதனால் வாக்குவாதம் முற்றியது.

    அப்போது ஜெயம்மாள், தான் குளிப்பதற்காக கொதிக்க வைத்த வெந்நீரை எடுத்து வந்து செல்லம்மாள் மீது ஊற்றினார். இதில் முகம், கை வெந்தது. வலியால் கதறிய அவரை பொதுமக்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் என்பது தெரியவந்தது.

    இதனிடையே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதை அறிந்ததும் கண்ணுபையன் தலைமறைவாகி விட்டார். கைதான ஜெயம்மாளை போலீசார் சேலம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர்.

    தலைமறைவான கண்ணுபையன் எந்த ஊரில் பதுங்கி இருக்கிறார் என தெரியவில்லை. அவரை போலீசார், பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×