search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கோவையில் இளம்பெண் மீது ஆசிட் வீசிய முதியவர் கைது

    இளம்பெண் மீது ஆசிட் வீசிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    தர்மபுரியை சேர்ந்தவர் ஸ்டாலின்(வயது40). இவரது மனைவி ராதா(34). இவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தனர். இங்கு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கணவன், மனைவி இருவரும் கட்டிட வேலைக்கு சென்று வந்தனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 

    இந்தநிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ராதாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனது கணவரை பிரிந்து அம்மன்குளம் பகுதியில் வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

    கடந்த 6-ந் தேதி ராதா தர்மபுரிக்கு சென்று விட்டு மீண்டும் கோவைக்கு வந்தார். பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அவரை முதியவர் ஒருவர் பின்தொடர்ந்து வந்தார்.
     
    வீட்டின் அருகே சென்ற போது அவரை பின் தொடர்ந்து வந்த முதியவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து ராதாவின் முகத்தில் வீசி விட்டு தப்பி யோடி விட்டார். இதில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து ராதா கொடுத்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஆசிட் வீசியவரை பிடிக்க துணை கமிஷனர் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
     
    விசாரணையில் ராதா மீது ஆசிட் வீசியது கோவை செட்டி பாளையத்தை இளங்கோவன்(59) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று காலை கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    ராதாவின் கணவரும், எனது மகளின் கணவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் தற்போது வரை ஒன்றாகவே வேலைக்கு சென்று வருகிறார்கள். இதற்கிடையே ஸ்டாலின் தனது மனைவியை பிரிந்து தனியாக சென்று விட்டார். அதன் பின்னர் எனது மருமகனின் நடவடிக்கைகளில் சற்று மாற்றங்கள் தெரியவந்தது. அடிக்கடி  வெளியில் செல்வதாக கூறி விட்டு சென்று விடுவார். மேலும் தனது குடும்பத்தை சரிவர கவனிக்காமல் இருந்தார். வீட்டு செலவுக்கும் பணம் கொடுக்காமல் இருந்தார்.

    இதனால் ஸ்டாலின் மனைவி ராதாவுக்கும், எனது மருமகனுக்கும் கள்ளத் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு  ஏற்பட்டது. அதன் காரணமாகவே மருமகன் வீட்டை சரிவரை கவனிக்காமல் இருக்கலாம் என்றும் எனக்கு தோன்றியது. இதனால் எனது மருமகன் மீதும், ராதா மீதும் எனக்கு கோபம் ஏற்பட்டது.  

    ராதாவின் அழகை சிதைத்து விட்டால் எனது மருமகன் அங்கு செல்லமாட்டார் என நினைத்த நான், அதற்காக அந்த பகுதியில் உள்ள கடையில் செடிகள், மரங்களை அழிக்க பயன்படுத்தக் கூடிய ஆசிட்டை வாங்கி வைத்தேன்.

    பின்னர் திட்டத்தை அரங்கேற்ற காத்திருந்தேன். அதன்படி  சம்பவத்தன்று ராதா தர்மபுரி சென்று விட்டு மீண்டும் கோவைக்கு வருவதை அறிந்தேன். உடனடியாக நான் பஸ் நிலையத்திற்கு சென்றேன்.  அங்கு ராதா பஸ்சில் வந்து இறங்கியதை மறைந்து இருந்து பார்த்தேன்.

    பின்னர் அவரை பின்தொடர்ந்து நடந்து சென்றேன். வீட்டின் அருகே சென்றதும் நான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அவரின் முகத்தில் வீசி விட்டு தப்பியோடிவிட்டேன். ஆனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி என்னை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×