என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.
ஹெலிகாப்டர் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரத்தில் ராணுவ வீரர்களுக்கு நினைவுத்தூண்-ராணுவ அதிகாரிகள் ஆய்வு
ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் ராணுவ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்
குன்னூர்:
கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த மாதம் 8-ந் தேதி முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் 14 பேர் குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமுக்கு ராணுவ ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தனர்.
ஹெலிகாப்டர் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் சென்றபோது, விபத்தில் சிக்கியது. இதில் முப்படை தலைமை தளபதி உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அந்த பகுதி முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ராணுவத்தினர், தீயணைப்புத்துறையினர் இணைந்து, ஹெலிகாப்டரின் உள்ள பாகங்களை மீட்கும் பணியில் துரித கதியில் ஈடுபட்டனர். முதலில் சிறிய பாகங்களை மீட்டனர். பின்னர் பெரிய பாகங்களை வெட்டி எடுத்தனர். பின்னர் மீட்கப்பட்ட பாகங்களை சூலூர் விமானப்படை தளத்திற்கு அனுப்பி வைத்தனர்.
19 நாட்களாக நடந்த மீட்புபணிக்கு பிறகு கடந்த 26-ந் தேதி நஞ்சப்பசத்திரம் பகுதி ராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விபத்து நடந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமா னோர் வந்து ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி சென்ற வண்ணம் உள்ளனர். இதற்கிடையே ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ராணுவ வீரர்களுக்கு, நஞ்சப்பசத்திரம் பகுதியில் நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் நஞ்சப்பசத்திரம் பகுதிக்கு எம்.ஆர்.சி ராணுவ முகாம் அதிகாரிகள் வந்தனர். அவர்கள், அங்கு எந்த பகுதியில் நினைவுத்தூண் அமைக்கலாம் என்பது குறித்துஆய்வு மேற்கொண்டனர். மேலும், நினைவுத்தூண் அமைப்பதற்கு இடமும் அளவீடு செய்யப்பட்டது. விரைவில் அந்த பகுதியில் நினைவுத்தூண் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story






