search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யோகா திருவிழாவை கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தனர்.
    X
    யோகா திருவிழாவை கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தனர்.

    யோகா நோய்களுக்கு மருந்தாகும்-கவர்னர் தமிழிசை பேச்சு

    யோகா நோய்களுக்கு மருந்தாகும் என கவர்னர் தமிழிசை கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை சுற்றுலாத்துறை சார்பில் 27-வது அகில உலக யோகா திருவிழா கடற்கரை சாலையில் தொடங்கியது.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்-அமைச்சர் ரங்கசாமி விழாவுக்கு  தலைமை வகித்தார். 

    கவர்னர் தமிழிசை யோகா திருவிழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-

    யோகா    உடலையும், உள்ளத்தையும் பாதுகாக்கும். புதுவை சித்தர்களின் பூமி. யோகப்பயிற்சி செய்து தான்  சித்தர்கள்  100 ஆண்டுகளுக்கும்  மேலாக  வாழ்ந்தார்கள். 

    புதுவையில் 27 ஆண்டாக உலக யோகா திருவிழா நடக்கிறது என்பது வெகு காலத்துக்கு முன்பே யோகா பற்றி நாம் அறிந்து  வைத்துள்ளோம் என்பதற்கு ஆதாரமாக இருக்கிறது.  யோகா கற்றவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டாலும் மனது பாதிக்கப்படாமல் மீண்டு  வருவார்கள். யோகா உடலுக்கும்,   மனதுக்கும் பாதுகாப்பு தருகிறது. 

    யோகா  நிச்சயமாக நோய்களுக்கு  மருந்தாக அமைகிறது. யோகா கற்றுக்  கொண்டால் இளமையாக இருக்க முடியும் என்பதை இளைஞர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.  இந்திய யோக கலையை உலகம்  முழுவதும் ஜூன் 21-ந் தேதி கொண்டாடுகின்றனர். இதற்கு பிரதமருக்கு நன்றி கூற வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    முதல்&அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
    புதுவையில் சுற்றுலா மூலம் வருவாயை பெருக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். வார  இறுதியில் பல மாநில மக்கள் இங்கு வந்து மகிழ்ந்து செல்கின்றனர்.  உடலில் எதிர்ப்பு சக்தி இருந்தால் தொற்று நம்மை தாக்காது என்ற நிலை உள்ளது. 

    நோயற்ற வாழ்வு வாழ யோகா அடிப்படையாக உள்ளது.   புதுவையை மேம்படுத்த அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.  தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுவையின் அனைத்து இடங்களையும் சுற்றுலாத்தலமாக கொண்டு வரவேண்டும்.  

    புதுவை பழமையான நகரம். பழமையான கட்டிடங்கள் உள்ளன. இப்போது நமக்குள்ள சிரமம் பழமையான கட்டிடங்களை பாதுகாப்பதுதான். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அனைத்து   பழமையான கட்டிடங்களையும் பாதுகாக்கும்   நடவடிக்கையை நாம் எடுத்து வருகிறோம். தொடர்ந்து எடுப்போம். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், பாஸ்கர்,  சுற்றுலாத்துறை செயலர் அருண், இயக்குனர் பிரியதர்ஷனி உள்பட பலர் உடனிருந்தனர். 

    வருகிற 7-ந்தேதி வரை யோகா திருவிழா பல்வேறு இடங்களில் நடத்தப்படுகிறது. வெளிமாநிலத்தை சேர்ந்த ஆயிரம் பேர் இதில் பங்கேற்கின்றனர். நாள்தோறும் யோகாசன போட்டிகள், செயல்விளக்கம் நடக்கிறது. 

    நல்வாழ்வு கண்காட்சி, இயற்கை உணவு அங்காடிகளும் நடத்தப்படுகிறது. நாள்தோறும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், யோகா வல்லுனர்களின்  சொற்பொழிவுகளும் நடத்தப்படுகிறது.
    Next Story
    ×