என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்ணீரில் மூழ்கிய  நெற்பயிர்கள்
    X
    தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

    திருப்பத்தூரில் பலத்த மழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

    திருப்பத்தூரில் இரவில் பெய்த பலத்த மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட் டம் திருப்பத்தூர் தாலுகாவை சுற்றியுள்ள நெற்குப்பை, வேலங்குடி, கொன்னத்தான் பட்டி, ஆ.தெக்கூர், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று ஒரே இரவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

     கனமழையின் காரணமாக இந்த பகுதிகளில் இருந்து வரும் கண்மாய்களின் கலிங்கு பாதைகளில் இருந்து வெளியேறும் அதிகப்படியான உபரி நீரினால் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெற்பயிர்களுக்குள்  வெள்ளம் புகுந்தது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் இருந்து வருகிறது. 

    இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு பருவ மழை குறித்த நேரத்தில் பெய்த காரணத்தினால் நாங்கள் நெற்பயிர்களை நடவு செய்து அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்து வந்தோம். 

    ஆனால் நேற்று இரவு திடீரென கொட்டி தீர்த்த கன மழையினால் எங்கள் பயிர்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி நாசம் அடைந்துள்ளது. 

    எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையீடு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறினர். 

    இது ஒருபுறமிருக்க பல ஆண்டுகளாக வரத்து கால்வாய்களில் தண்ணீர் வராமல் இருந்த நிலையில் தற்சமயம் அதிகப்படியான தண்ணீர் வருவதை பார்த்த கிராம மக்கள் கலிங்கு, மடை போன்ற பகுதிகளில் கொசுவலை, பரி, வீச்சுவலை போன்றவற்றினால் கெண்டை, கெளுத்தி, அயிரை போன்ற மீன்களை பிடிக்கும் வேளையிலும்  ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×