search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடும்பு
    X
    உடும்பு

    சேலம் அருகே உடும்பை கொன்று உணவு சமைத்தவர் கைது - வனத்துறையினர் அதிரடி

    உடும்பை வேட்டையாடி சமைத்த முதியவரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் வாழிடமாக உள்ளது. இம்மாவட்டம் செழிப்பாக இருக்க அவையும் ஒரு காரணமே. பல ஆயிரம் எக்டேர் வனப்பகுதி உள்ள இம்மாவட்டத்தில் அரிய விலங்குகள், பறவைகள், மூலிகைகள், மரங்கள் மற்றும் பூச்சியினங்கள் உள்ளன. காடுகள் செழிப்பில் விலங்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

    எனவே கோடை காலத்தில் விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. வனப்பரப்பை அதிகரிக்க அரிய வகை மரங்கள் நடப்பட்டுள்ளது.

    இந்தியாவில் வன விலங்குகளுக்காக 44 தேசிய பூங்கா, 247 வன விலங்கு சரணாலயங்கள் உள்ளன. வனப் பாதுகாப்புக்கு பல்வேறு சட்டங்கள் இருந்தாலும் காலநிலை மாற்றம், வேட்டையாடுதல், வறட்சி, பிளாஸ்டிக் பயன்பாடு, ஆக்கிரமிப்பு போன்றவற்றால் விலங்குகளுக்கு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 

    குறிப்பாக காடுகளில் விலங்குகளின் வழித்தடங்களை ஆக்கிரமிப்பதாலும், பசியாலும் அவை, பாதை மறந்து கிராமங்களுக்கு புகுந்து விடுகின்றன. அந்த வகையில் பாதை மாறி வந்த உடும்பை கொன்று தீ வைத்து எரித்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம் மாவட்டம் வீரகனூர் வீ.ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சுருட்டையன் (வயது 74). இவர், உடும்பை வேட்டையாடுவதில் வல்லவர். மேலும், பறவைகள், வனவிலங்குகளை வேட்டையாடி சாப்பிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து பாதை மாறி சாலையில் பெரிய உடும்பு ஒன்று மெல்ல ஊர்ந்து வந்தது. இதை கவனித்த வேட்டையனுக்கு நாக்கில் ருசி பொங்கியது. அந்த உடும்பை வேட்டையாட முடிவு செய்தார். நைசாக அவற்றை பிடித்து, அங்குள்ள ஏரி பகுதிக்கு கொண்டு சென்றார். அங்கு வைத்து அதை கொன்று, தோலை உரித்து, மசாலாவை தடவி தீயில் சுட்டுக் கொண்டிருந்தார்.

    இது பற்றி அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் ரகசியமாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தம்மம்பட்டி வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர் ஏரி பகுதிக்கு சென்றபோது அங்கு சுருட்டையன், உடும்பை தீயில் சுட்டுக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

    இதையடுத்து அவரை கைது செய்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×