என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் சேலையில் வேலி அமைத்துள்ளதை படத்தில் காணலாம்.
விலங்குகள், பறவைகளிடம் இருந்து பயிரை காப்பாற்ற வயலில் சேலை வேலி அமைத்துள்ள விவசாயிகள்
விளைந்த பயிரை விலங்குகள் மற்றும் பறவைகளிடம் இருந்து காப்பாற்ற வயல்களை சுற்றி விவசாயிகள் சேலைகளை கொண்டு வேலிகள் அமைத்துள்ளனர்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலும் வசிக்கும் மக்கள் அதிகஅளவில் விவசாய தொழிலை நம்பி வாழ்ந்து வருகின் றனர். மேலும் இந்த பகுதி வானம் பார்த்த பூமியாக உள்ள தால் ஆண்டுதோறும் பெய்ய வேண்டிய பருவமழை நன்றாக பெய்து இங்குள்ள நீர்நிலைகள் நிரம்பினால் மட்டுமே இந்த பகுதியில் விவசாயம் செழிக்கும் நிலை உள்ளது.
இவ்வாறு கடந்த காலக்கட்டத்தில் இந்த மாவட்டத்தில் போதிய மழைஇல்லாமல் இருந்ததால் விவசாய தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பெய்த பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக இந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கண்மாய்கள், ஆறுகள், ஊருணிகள் நிரம்பின.
இதை பயன்படுத்தி விவசாயிள் தங்களது விளை நிலங்களில் விவசாயம் செய்து அவற்றை பராமரித்து வருகின்றனர். முன்கூட்டியே விவசாயம் செய்த விவசாயிகள் நெல் பயிர்கள் விளைந்து தற்போது அறுவடைக்காக காத்திருந்த நிலையில் உள்ளது. மானாமதுரை, சிவகங்கை, காளையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பயிரிட்ட நெல் பயிர்கள் தொடர் மழை காரணமாக பல ஏக்கர் பயிர்கள் தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவமழையில் மூழ்கி விவசாயிகளுக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது.
இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளால் விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஏமாற்றமும், பெரும் நஷ்டமும் கிடைத்த நிலையில் தை மாத அறுவடைக்காக தயார் நிலையில் உள்ள நெல் பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் கதிர்களை ஆடு, மாடு, பறவைகள் மற்றும் காட்டு விலங்குகள் உள்ளிட்டவைகளால் நெல்பயிர்கள் அதிகஅளவில் சேதமடைய வாய்ப்பு உள்ளது.
இவற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் திருப்பத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற விவசாயிகள் நெல் பயிரை காப்பாற்றும் வகையில் வயலை சுற்றி சேலைகள் கொண்டு வயல்களை சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.
மேலும் பகல் நேரங்களில் விலங்குகள் தொல்லையும், இரவு நேரங்களில் காட்டு விலங்குகள் வயலில் இறங்கி நெல்பயிரை சேதப்படுத்துவதையும் தவிர்க்கும் வகையில் இந்த வேலியை அமைத்துஉள்ளனர். இதனால் எளிதாக வயலில் உள்ளே விலங்கு மற்றும் பறவைகள் நுழைவதை தடுக்க முடியும். இதுதவிர பகல் நேரங்களில் வயல்வெளிகளுக்கு செல்லும் விவசாயிகள் சத்தங்களை எழுப்பி பறவைகளிடம் இருந்து நெல்பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.
Next Story






