search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நிரம்பும் தருவாயில் வட்டமலைக்கரை அணை

    பி.ஏ.பி., பாசன கால்வாய் மூலம் கள்ளிபாளையம் ஷட்டரிலிருந்து கடந்த நவம்பர் 25ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே 650 ஏக்கர் பரப்பளவில் வட்டமலைக்கரை அணை கட்டப்பட்டது. 27 அடி உயரம் வரை 0.53 டி.எம்.சி., நீர் தேக்க முடியும். அணை மூலம் இடது - வலது ஆகிய இரு கால்வாய்கள் மூலம் 6 ஆயிரத்து 43 ஏக்கரில், 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகிறது. 

    பல ஆண்டுகள் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியதையடுத்து தற்போது பி.ஏ.பி., பாசன வாய்க்காலில் உபரி நீர் 300 கனஅடி வீதம் திறக்கப்பட்டது.

    பி.ஏ.பி., பாசன கால்வாய் மூலம் கள்ளிபாளையம் ஷட்டரிலிருந்து கடந்த நவம்பர் 25ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 2-ந் தேதி செட்டிபாளையம் அருகே பொதுமக்கள், விவசாயிகள், பெண்கள் பொங்கல் வைத்து பூ தூவி தண்ணீரை வரவேற்றனர்.

    ஏறத்தாழ 40 கி.மீ., தொலைவிற்கு 36 ஆண்டுகளுக்கு பின்பு 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை நிரப்பி தண்ணீர் வருகிறது. இதனால் வழியோர கிராமங்கள் அனைத்திலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

    தற்போது 30 அடி உயரமுள்ள அணையில் 25 அடியை தண்ணீர் தொட்டு உள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை அணை நிரம்பும் நிலை உருவாகலாம். பொதுமக்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் அணையில் நீர் நிரம்பியதை பார்த்து ரசிக்கின்றனர்.

    இந்தநிலையில் நிரம்பும் தருவாயில் உள்ள வட்டமலை அணையை தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் காளிமுத்து மற்றும் வட்டமலை அணை பாசன விவசாயிகள் நலச் சங்கத்தினர் பார்வையிட்டனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:

    பரம்பிக்குளம் ஆழியாறு தொகுப்பு அணைகளின் நீர்வரத்தை நம்பியே வட்டமலை அணை கட்டப்பட்டது.1982 ஆம் ஆண்டு பாசனத்துக்கு வந்த வட்டமலை அணை 10 ஆண்டு காலம் போதுமான தண்ணீர் இருந்து நேரடியாக 6,100 ஏக்கர், மறைமுகமாக 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் நடைபெற்று வந்தது. 

    பின்னர் போதிய மழையின்மை, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விரிவாக்கத்தால் வட்டமலை அணைக்கு 30 ஆண்டுகளாகத் தண்ணீர் கிடைக்காமல் போய்விட்டது.

    தற்போது நல்ல மழை காரணமாக பரம்பிக்குளம் ஆழியாறு உபரிநீர் வட்டமலை அணைக்கு திறக்கப்பட்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் பல ஆண்டுகள் காய்ந்து கிடந்த அணைப்பகுதி முழுவதும் தண்ணீரை உறிஞ்சிக் கொண்டுள்ளது. 

    எனவே ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ள தண்ணீரை கூடுதலாக 15 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும். சீர்குலைந்து கிடக்கும் அணையின் பாசன வாய்க்கால்களைச் சீரமைக்க வேண்டும். 

    அமராவதி ஆற்று உபரிநீர்திட்டத்தையும் நிறைவேற்றி வட்டமலை அணைக்கு தண்ணீர் கிடைக்க நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றனர். இந்நிலையில் அணையின் மதகுப் பகுதி, கால்வாய்கள் போன்றவற்றின் பராமரிப்புப் பணிகள் பொதுப்பணித் துறையால் தொடங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×