என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளிகளின் பாதுகாப்பு குறித்து தலைமை ஆசிரியர்களுடான ஆய்வுக்கூட்டம் நடந்தபோது எடுத்தபடம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பாதுகாப்பற்ற 51 பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்படும் - கலெக்டர் தகவல்
பெரம்பலூர் மாவட்டத்தில் பாதுகாப்பற்ற 51 பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்தார்.
பெரம்பலூர்:
நெல்லையில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் கழிவறையின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு சென்னை அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குனரும் (இடைநிலை), பள்ளி கட்டிடங்களின் ஆய்வுக்குழுவிற்கு பெரம்பலூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலருமான செல்வகுமார் தலைமை தாங்கினார்.
இதில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கலந்து கொண்டு தலைமை ஆசிரியர்களிடையே பேசும்போது கூறியதாவது:- பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடிகளில் ஆய்வு செய்ததில், பழைய மற்றும் பாதுகாப்பற்ற 51 பள்ளி கட்டிடங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் மூலம் இந்த கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கும் பணிகள் 2 நாட்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.
பழைய கட்டிடங்களை இடிக்கும் பணிகளின் போது பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். பள்ளி வளாகங்கள் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் வகையில் தொடர்ந்து தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். மேலும் பள்ளிகளுக்கு செல்லும் கல்வித்துறை அலுவலர்களும் கற்றல் தொடர்பான ஆய்வுகளுடன் பள்ளி வளாகம் தூய்மையாகவும், பாதுகாப்பாக உள்ளதா? என்பதையும் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், கல்வி மாவட்ட அலுவலர்கள் சண்முகம் (பெரம்பலூர்), ஜெகநாதன் (வேப்பூர்), முதன்மை கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்கள் சிதம்பரம், ராஜேந்திரன், வட்டார கல்வி அலுவலர்கள் அன்பழகன் (பெரம்பலூர்), இளங்கோவன் (ஆலத்தூர்), சாந்தப்பன் (வேப்பூர்), ஜோதிலட்சுமி (வேப்பந்தட்டை), பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து பள்ளி கட்டிடங்களின் ஆய்வுக்குழு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செல்வகுமார் செஞ்சேரி, பாளையம், குரும்பலூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story






