search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வெள்ளை ஈ தாக்குதலால் தென்னையில் மகசூல் பாதிப்பு - ஒட்டுப்பொறி வழங்கப்படுமா?

    வெள்ளை ஈக்கள், தென்னை ஓலைகளின் உட்புறத்தில் தங்கி, படிப்படியாக பச்சையத்தை முழுமையாக சுரண்டி விடும்.
    குடிமங்கலம்:

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. ஆண்டுதோறும் இச்சாகுபடி பரப்பு அதிகரித்து வரும் நிலையில் புதிய வகை நோய்த்தாக்குதல்களும் குறையவில்லை.

    தென்னை மரங்களில் தஞ்சாவூர் வாடல், காண்டாமிருக வண்டு, ஈரியோபைட் உட்பட பல்வேறு நோய்த்தாக்குதல்கள் இருந்தாலும் வெள்ளை ஈ தாக்குதல் பாதிப்பு பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகிறது.

    வெள்ளை ஈக்கள், தென்னை ஓலைகளின் உட்புறத்தில் தங்கி, படிப்படியாக பச்சையத்தை முழுமையாக சுரண்டி விடும். ஓலைகள் கருப்பு நிறமாக மாறி திரவம் வெளியேறும் வரை அவற்றின் தாக்குதல் தெரியாது. குறிப்பாக வீரிய ஒட்டு ரக இளநீர் மரங்களில், வெள்ளை ஈக்களால் அதிக பாதிப்பு உள்ளது.

    பச்சையத்தை இழக்கும் மரங்களில் பாளைகள் குறைந்து காய்ப்புத்திறன் முற்றிலுமாக சரியும். மரங்களின் வளர்ச்சியும், காய்ப்புத்திறனும் குறைந்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகளை பின்பற்றியும், எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

    கடந்த 5 ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்சினை தொடர் மழைக்குப்பிறகு  மீண்டும் உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் அதிகரித்து வருகிறது. விவசாயிகள் மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை தனியாரிடம் விலைக்கு வாங்கி  மரந்தோறும் பொருத்தி கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

    தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த ஒட்டுப்பொறி, இரை விழுங்கிகளை அதிக அளவு வேளாண்துறை வாயிலாக வழங்க வேண்டும். அருகருகே உள்ள விவசாயிகள் ஒருங்கிணைந்து நோய்க்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றினால் மட்டும் பலன் கிடைக்கும். 

    அற்கேற்ப வேளாண்துறையினர், வட்டார வாரியாக இரை விழுங்கிகளை மானியத்தில் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தென்னையில் மகசூல் குறைவதுடன் மரங்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும். மழைக்கு பிறகு வெள்ளை ஈக்கள் வேகமாக பரவுவதால், உடனடியாக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை துவங்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×