என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்கால் அலையாத்தி காடுகளில் செங்கால் நாரைகள், பறவைகள் இரைதேடுவதை காணலாம்
    X
    காரைக்கால் அலையாத்தி காடுகளில் செங்கால் நாரைகள், பறவைகள் இரைதேடுவதை காணலாம்

    காரைக்கால் அலையாத்தி காடுகளுக்கு வெளிநாட்டு பறவைகள் படையெடுப்பு

    பறவைகள் வேட்டையாடுவதை தடுக்கவும், அலையாத்தி காடுகளில் உள்ள முட்செடிகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் கடற்கரை சாலையையொட்டி சுமார் 25 ஏக்கர் சதுப்பு நிலத்தில் அலையாத்தி காடுகள் உள்ளன. இந்த வகை காடுகள் சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தின்போது, நகர் பகுதியில் தண்ணீர் புகாமல் தடுத்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 1996-ம் ஆண்டு ரூ.6 லட்சம் செலவில் அலையாத்தி செடிகள் நடப்பட்டன. அந்த செடிகள் வளர்ந்து காடுகளாக மாறியதால் அங்கு சைபீரியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் தங்கி இரை இளைப்பாறி சென்றன.

    இதைத்தொடர்ந்து, அலையாத்தி காட்டை சுற்றியுள்ள கடற்கரை பகுதியை அரசு சுற்றுலா தலமாக அறிவித்து, பல லட்சம் செலவில் நடைபாதை, பூங்கா, அமரும் வித்தியாசமான நாற்காலிகளை அமைத்தது. இதனால் காரைக்காலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை வெளிநாட்டு பறவைகளை கண்டு களித்தனர்.

    இந்தநிலையில் அலையாத்தி காடுகளில் பறவைகள் வேட்டையாடுவது அதிகரித்தது. மேலும் காடுகளின் மத்தியில் முட்செடிகள் அதிக அளவில் வளர தொடங்கியதால் செடிகளில் அமர முடியாத பறவைகள் வேறு இடத்துக்கு செல்ல தொடங்கின. இதனால் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு பறவைகளின் வரத்து குறைந்தது.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அலையாத்தி காட்டின் மேற்கே சேறும், சகதியுமான இடத்தில் 100-க்கும் மேற்பட்ட செங்கால் நாரைகளும், வெள்ளை கொக்குகளும் தங்கி இளைப்பாறி செல்கின்றன. சில அரிய வகை வெளிநாட்டு பறவைகளும் படையெடுத்து வருகின்றன. இந்த பறவைகள் ஜனவரி மாதம் வரை தங்கியிருந்து இளைப்பாறும் என்று கூறப்படுகிறது.

    எனவே பறவைகள் வேட்டையாடுவதை தடுக்கவும், அலையாத்தி காடுகளில் உள்ள முட்செடிகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×