search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் உருக்குலைந்த ஹெலிகாப்டர்.
    X
    விபத்தில் உருக்குலைந்த ஹெலிகாப்டர்.

    ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் என்ன?- நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 3 கோணங்களில் விசாரணை

    பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற பகுதிகளில் உள்ள விமானப்படை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் இருந்த படியே ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
    கோவை:

    கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 8-ந்தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் மையத்திற்கு ராணுவ ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணித்தனர்.

    இந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி பூங்கா நஞ்சப்பசத்திரம் பகுதியில் சென்ற போது விபத்துக்குள்ளானது. இதில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேரும் உயிரிழந்தனர்.

    விபத்து தொடர்பாக முப்படைகளின் சார்பில் அமைக்கப்பட்ட ஏர்மார்‌ஷல் மன்வேந்திர சிங் தலைமையிலான விசாரணை குழுவினர், குன்னூர் வந்து, விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து விபத்தை நேரில் பார்த்தவர்கள், விபத்து நடந்த இடத்திற்கு முதலில் வந்தவர்கள், விபத்து நடப்பதற்கு முன்பு ஹெலிகாப்டரை கடைசியாக செல்போனில் வீடியோ எடுத்தவர்கள், தொழிலாளர்கள் என இதுவரை 80 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் பாகங்களையும் மீட்டு அந்த பகுதியில் மொத்தமாக வைத்துள்ளனர். வனப்பகுதி என்பதால் அங்கிருந்து மீட்ட பொருட்களை எடுத்து செல்வதில் சிரமம் உள்ளது. இதனால் மீட்ட பொருட்களை அங்கேயே வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் அந்த பகுதியில் இருந்து குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலைக்கு புதிய வழித்தடம் அமைத்து பொருட்களை எடுத்து செல்வதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் இருந்து முதலில் கருப்பு பெட்டியை மீட்ட விசாரணை குழுவினர், அதனை ஆய்வு செய்வதற்காக பெங்களூருவில் உள்ள மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் என்ன என்பதை கண்டறிவதற்காக விமானப்படை 3 கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற பகுதிகளில் உள்ள விமானப்படை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் இருந்த படியே ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பெங்களூருவை சேர்ந்த நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்ட கருப்பு பெட்டியில் பதிவான தகவல்களை சேகரிக்க தொடங்கியுள்ளனர். ஹெலிகாப்டரில் பயணித்தவர்களிடையே கடைசியாக ஏதாவது கலந்துரையாடல் நடந்ததா? அப்படி நடந்தால் அவர்கள் என்ன பேசி கொண்டனர் போன்ற தகவல்களை சேகரித்து, அந்த கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதவிர டெல்லியை சேர்ந்த விமானப்படை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், எந்தவிதமான இடத்திலும் செல்லக்கூடிய அதிநவீன இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது எப்படி? அதற்கான காரணம் என்ன? ஹெலிகாப்டரில் ஏதேனும் கோளாறு இருந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் மும்பையை சேர்ந்த நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் வெவ்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×