search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    7 மாதங்களுக்கு பிறகு சீரான மின்விநியோகம்- ஆலாமரத்தூர் கிராமமக்கள் மகிழ்ச்சி

    பிற மாநிலத்தில் இருந்து பாகங்களை பெற ஊரடங்கு உள்ளிட்ட பிரச்சினைகளால் சிக்கல் ஏற்பட்டது.
    குடிமங்கலம்:

    குடிமங்கலம் ஒன்றியம், ஆலாமரத்தூரில் 2019ல் மின்வாரியம் சார்பில் புதிய துணை மின் நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த துணை மின்நிலையம் வாயிலாக சுற்றுப்பகுதிகளை சேர்ந்த  25-க்கும் அதிகமான கிராமங்கள் பயன்பெற்று வந்தன. புதிய துணை மின்நிலையத்தால் கிராமங்களில் தாழ்வழுத்த மின்வினியோக பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. 

    இந்நிலையில் இந்தாண்டு மே மாதத்தில் பெய்த மழையின் போது இடித்தாக்குதலால் துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட முக்கிய கருவிகள் சேதமடைந்தன.சீரமைப்பு பணிகளுக்கு தேவையான உதிரிபாகங்கள் கிடைக்கவில்லை.

    பிற மாநிலத்தில் இருந்து பாகங்களை பெற ஊரடங்கு உள்ளிட்ட பிரச்சினைகளால் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பழைய முறையில் கொங்கல்நகரம், நெகமம், பூளவாடி உட்பட 5 பீடர்கள் வாயிலாக மின்சாரம் வினியோகிக்கப்பட்டது. கூடுதல் மின்திறன் உள்ளிட்ட காரணங்களால் பழைய பீடர்களில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு மின்வாரியம் சார்பில் சிறப்பு குழு அமைத்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவானது.

    ஆலாமரத்தூர் துணை மின் நிலைய சீரமைப்புக்காக, உடுமலை மின்பகிர்மான வட்ட அதிகாரிகள் தரப்பில் தொடர்ந்து, அரசுக்கு கருத்துரு அனுப்பினர். புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்தலில் நிலவும் சிக்கல் குறித்து மின்சாரத்துறை அமைச்சருக்கும் மனு அனுப்பப்பட்டது.

    இந்நிலையில் 7 மாத இழுபறிக்கு பிறகு ஆலாமரத்தூர் துணை மின் நிலையத்தில், புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து  கருவிகள் சீரமைக்கப்பட்டு மின்வினியோகம் தொடங்கி உள்ளது.

    இதையடுத்து மின்வாரிய கோவை மண்டல தலைமை மேற்பார்வை பொறியாளர் டேவிட்ஜெபசிங், உடுமலை பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராசாத்தி தலைமையிலான குழுவினர் துணை மின் நிலையத்தில் ஆய்வு செய்தனர்.

    நீண்ட இழுபறிக்குப்பிறகு மின் வினியோக பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
    Next Story
    ×