என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேறு பெண்ணை திருமணம் செய்த கல்லூரி விரிவுரையாளருக்கு வலைவீச்சு
    X
    வேறு பெண்ணை திருமணம் செய்த கல்லூரி விரிவுரையாளருக்கு வலைவீச்சு

    காதலித்த பெண்ணை ஏமாற்றி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த கல்லூரி விரிவுரையாளருக்கு வலைவீச்சு

    காதலித்த பெண்ணை ஏமாற்றி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த கல்லூரி விரிவுரையாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரை ேபாலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே உள்ள கொற்றவநல்லூரை சேர்ந்த செல்வம் மகன் ஆனந்த். இவர் கடந்த 2014-ம் ஆண்டு பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழகியுள்ளார் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் ஆனந்த் தன்னை கைவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னிடம் பல லட்சம் பணம் வாங்கிக்கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசில் அந்த பெண் புகார் கொடுத்துள்ளார்.

    அந்த புகாரில், நானும் மயிலாடுதுறை அருகே உள்ள கொற்றவநல்லூரை சேர்ந்த செல்வம் மகன் ஆனந்த்தும் காதலித்து வந்தோம். என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆனந்த் ஆசைவார்த்தை கூறினார். அதை நான் நம்பி அவருடன் நெருங்கி பழகினேன்.

    அப்போது ஆனந்த், தான் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று என்னிடம் பணம் கேட்டார். நான் நகைகளை அடமானம் வைத்து அவருக்கு(ஆனந்துக்கு) பணம் கொடுத்தேன். படித்து முடித்ததும் தான் அரசு வேலையில் சேர உள்ளதாகவும், அதற்கு பணம் வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நான் வங்கி கணக்கில் இருந்தும், நேரடியாகவும் பல லட்சம் கொடுத்தேன்.

    இந்த நிலையில் எனக்கு தெரியாமல் ஆனந்த் வேறொரு பெண்ணை திருமணம் செய்த தகவல் அறிந்து நான் இது தொடர்பாக கேட்க சென்றேன். அப்போது அவர் தனது உறவினர்களை வைத்து என்னை தாக்கியதுடன் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    எனவே என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியது, பணம் வாங்கிக்கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றியது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த புகார் தொடர்பாக மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஆனந்தை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்தும் அவர் வரவில்லை.

    இதனையடுத்து ஆனந்த் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, திருமண ஆசைகாட்டி வாழ்க்கையை கெடுத்தல், கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் ஆனந்த் தற்காலிக விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×