என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நஞ்சப்பசத்திரம் கிராம மக்களை சந்தித்து நன்றி தெரிவித்த லெப்டினண்ட் ஜெனரல் அருண்
    X
    நஞ்சப்பசத்திரம் கிராம மக்களை சந்தித்து நன்றி தெரிவித்த லெப்டினண்ட் ஜெனரல் அருண்

    ஹெலிகாப்டர் விபத்து- மீட்பு பணி மேற்கொண்ட நஞ்சப்ப சத்திரம் கிராமத்தை தத்தெடுத்த ராணுவம்

    நஞ்சப்பசத்திரம் கிராமத்தை சென்னை தக்ஷின் பாரத் ஏரியா சார்பில் தத்தெடுப்பதாக லெப்டினண்ட் ஜெனரல் அருண் கூறினார்.
    குன்னூர்:

    குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த 8-ந் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியானார்கள். ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதை பார்த்தவுடன் நஞ்சப்ப சத்திரம் பகுதி மக்கள் உடனடியாக மீட்பு களத்தில் குதித்தனர். அவர்கள் கையில் கிடைத்த பாத்திரங்களில் தண்ணீரை கொண்டு போய் ஹெலிகாப்டரில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    மேலும் போலீஸ் மற்றும் ராணுவத்தினருக்கு தகவல் தெரிவித்து அவர்களுடன் இணைந்து மீட்பு பணியும் மேற்கொண்டனர். தங்கள் வீடுகளில் இருக்கும் போர்வைகள், கம்பளிகளை கொடுத்து விபத்தில் சிக்கிய ராணுவ அதிகாரிகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல உதவினர்.

    தன்னலம் பாராமல் உடனடியாக களத்தில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்ட நஞ்சப்பசத்திரம் மக்கள் அனைவரும் ஒட்டுமொத்த ராணுவத்தினர் இதயங்களிலும் இடம் பிடித்து விட்டனர். இந்த கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    அவர்களை ராணுவ அதிகாரிகள் சந்தித்து பாராட்டி நல உதவிகளை வழங்கி வருகிறார்கள். தமிழக காவல்துறை சார்பில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, கிராம மக்களை பாராட்டி கம்பளிகள் வழங்கினார்.

    இந்தநிலையில் நேற்று தென் பிராந்திய லெப்டினண்ட் ஜெனரல் ஏ. அருண் குன்னூருக்கு வருகை வந்தார். வெலிங்டனில் நடந்த நிகழ்ச்சியில் மீட்பு பணியில் ஈடுபட்ட மாவட்ட கலெக்டர் அம்ரித், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் மற்றும் அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.

    தொடர்ந்து லெப்டினண்ட் ஜெனரல் அருண், ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நஞ்சப்பசத்திரம் மக்களை சந்தித்து பாராட்டு தெரிவித்தார். கிராம மக்களுக்கு தேவையான போர்வைகள், சோலார் எமர்ஜென்சி விளக்குகள் மற்றும் உணவுப்பொருட்களை அவர் வழங்கினார்.

    லெப்டினண்ட் ஜெனரல் அருண் பேசுகையில் கிராம மக்களின் முயற்சி தன்னை நெகிழ்வித்ததாக தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில் நஞ்சப்பசத்திரம் கிராமத்தை சென்னை தக்ஷின் பாரத் ஏரியா சார்பில் தத்தெடுப்பதாக தெரிவித்தார்.

    அதன்படி இந்த கிராம மக்கள் ஒன்று கூடும் வகையில் சமுதாய கூடம் ஒன்று கட்டிக் கொடுக்கப்படும், அடுத்த ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி வரை ஒவ்வொரு மாதமும் இந்த கிராமத்தில் டாக்டர், நர்சுகளை கொண்டு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். மேல் சிகிச்சை தேவைப்பட்டால் ராணுவ ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்யப்படுவர் என தெரிவித்தார்.

    அவரது அறிவிப்புக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்தை முதலில் பார்த்து தகவல் தெரிவித்த கிருஷ்ணசாமி, சந்திரகுமார் ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.


    Next Story
    ×