search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மதுரை மேம்பாலம் விபத்து
    X
    மதுரை மேம்பாலம் விபத்து

    மதுரை மேம்பால விபத்து: அனுபவமில்லாத தொழிலாளர்களே காரணம்- விசாரணை அறிக்கை தாக்கல்

    மதுரை மேம்பால விபத்திற்கு பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஹைட்ராலிக் எந்திரத்தில் ஏற்பட்ட பழுது முக்கிய காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரையில் நடந்த பறக்கும் மேம்பால விபத்து தொடர்பாக விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    மதுரை தல்லாகுளம் முதல் புது நத்தம் ரோட்டில் பறக்கும் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த சில ஆண்டுகளாக பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி மதுரை நாராயணபுரம் பகுதியில் மேம்பால பணிகள் நடந்தபோது அதில் பொருத்தப்பட்ட தடுப்புகள் கீழே விழுந்தன. இந்த விபத்தில் வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். சில தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி பணியில் இருந்த என்ஜினீயர்கள் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

     

    மேம்பாலம் விபத்து

    இதற்கிடையே தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் இது தொடர்பாக திருச்சி என்.ஐ.டி.பொறியாளர் பாஸ்கர் தலைமையில் 3 பேர் அடங்கிய நிபுணர் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    இந்த நிபுணர் குழுவினர் கடந்த 2 மாதங்களாக தீவிர விசாரணை நடத்தினர். பல்வேறு கோணங்களில் விசாரணை தகவல்கள் திரட்டப்பட்டு நிறைவடைந்த நிலையில் விசாரணை அறிக்கைகளை தேசிய நெடுஞ்சாலை துறை, மாநில பொதுப்பணித்துறை மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் நிபுணர் குழுவினர் அளித்துள்ளனர்.

    இந்த விசாரணை அறிக்கையில் விபத்து ஏற்பட முக்கிய அம்சங்களாக பல்வேறு காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேம்பால விபத்திற்கு முக்கிய காரணமாக பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஹைட்ராலிக் எந்திரத்தில் ஏற்பட்ட பழுது குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் பயிற்சி, அனுபவம் இல்லாத தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதும் விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்தன்று நடைபெற்ற மேம்பால பணியின்போது தேசிய நெடுஞ்சாலை துறையினரால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு பொறியாளர்களின் மேற்பார்வையில் பணிகள் நடைபெறாததும் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மேம்பால கட்டுமான பணியின் போது தொழிலாளர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படாததும் முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே கட்டுமான முறையில் உரிய மாற்றங்கள் செய்து பணிகளை தொடரவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பணியின் போது கவனக் குறைவாக செயல்பட்ட 6 பொறியாளர்கள் மீது நடவடிக்கை தொடர்பாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.

    தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் மதுரை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்ட விசாரணை அறிக்கை விவரங்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

    இதையும் படியுங்கள்... டெல்லியில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று

    Next Story
    ×