என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேவகோட்டையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நகராட்சிக்கு சொந்தமாக பஸ் நிலையம், வாடியார் வீதி, கண்டதேவி ரோடு மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் நகராட்சி நிர்வாகம் மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக கடை உரிமையாளர்கள் சரிவர வாடகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மதுசூதனன் நேற்று ஆய்வு நடத்தி அதிக வாடகை பாக்கி உள்ள 6 கடைகளுக்கு சீல் வைத்தார். மேலும் வாடகை பாக்கி உள்ள கடைக்காரர்கள் உடனே அதனை செலுத்த வேண்டும் இல்லையென்றால் சீல் வைக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
நகராட்சி ஆணையாளரின் இச்செயல் வியாபாரிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தேவகோட்டை பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை அடைத்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், நகராட்சி நிர்வாகம் 4 ஆண்டுகளுக்கு முன்புதான் கடை வாடகையை 100 சதவீதம் உயர்த்தியது. இதனை எதிர்த்து வாடகையை குறைக்குமாறு பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வியாபாரம் சரிவர இல்லை. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கின் போது கடைகள் மூடப்பட்டு இருந்தது. அதற்கும் தற்போது நகராட்சி நிர்வாகம் வாடகை கேட்கிறது என்றனர்.
இதற்கிடையில் வியாபாரிகள் இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்துவதாக கூறி நகராட்சி அலுவலக ஊழியர்கள் அலுவலகத்தில் உள்ளேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.






