என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடைகள் அடைப்பு
    X
    கடைகள் அடைப்பு

    பிபின் ராவத் உள்பட 13 பேர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீலகிரியில் முழு கடையடைப்பு

    குன்னூரில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
    முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், பிரிகேரியர் லிடர் உள்பட 14 பேர் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு புறப்பட்டனர்.

    ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி அடுத்த நஞ்சப்பா சத்திரம் பகுதியில் சென்றபோது கீழே விழுந்து நொறுங்கியதில் முப்படைத் தலைமை தளபதி பிபின்ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

    உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு நேற்று காலை வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் அஞ்சலி செலுத்தப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ் டாலின், ராணுவ அதிகாரிகள் உள்பட அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அனைவரது உடல்களும் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.

    இந்த நிலையில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று மாவட்டம் முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என வியாபாரிகளும், ஓட்டல் உரிமையாளர்களும் அறிவித்தனர்.

    நீலகிரி மாவட்டத்தில் 2,500 கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் இன்று காலையில் மூடப்பட்டி ருந்தன. ஊட்டியில் நகராட்சி மார்க்கெட்டில் மளிகை, காய்கறி கடைகள் என ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு தினந்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொருட்களை விற்கவும், வாங்கவும் மக்கள் வந்த வண்ணம் இருப்பர்.

    இன்று காலை இந்த மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளுமே அடைக்கப்பட்டிருந்தது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மார்க்கெட் பகுதி ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    ஊட்டி கமர்சியல் சாலையில் செல்போன் கடைகள், நகைக் கடைகள், ஜவுளி கடைகள், எலக்ட்ரிக் கடைகள் என 300-க்கும் அதிகமான கடைகள் உள்ளன. பெரும்பாலும் ஜவுளி கடைகளே அதிகளவில் உள்ளன. இதனால் இங்கு எப்போதுமே மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த கடைகளும் இன்று அடைக்கப்பட்டதால் காலையில் இருந்தே இந்த பகுதியில் எந்தவொரு வாகனத்தையோ, மக்கள் நடமாட்டத்தையோ பார்க்க முடியவில்லை. இந்த பகுதியே மிகவும் அமைதியாக காணப்பட்டது.

    இதேபோல் ஊட்டியில் உள்ள டீக்கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் என அனைத்துமே மூடப்பட்டிருந்தது. இவர்கள் கடைகளை அடைத்து ராணுவ அதிகாரிகளுக்கு தங்கள் நினைவஞ்சலியை செலுத்தினர்.

    குன்னூர் மற்றும் கோத்தகிரி சுற்றுப்புற பகுதிகளான அருவங்காடு, பர்லியார், ஓட்டுப்பட்டரை, டெட்போர்டு, சேலாஸ், எலநள்ளி, கொடநாடு, கட்டபெட்டு, கொட்டகெம்பை, கீழ் கோத்தகிரி, சோலூர் மட்டம், குஞ்சப்பனை உள்பட அனைத்து பகுதிகளிலும் செயல்பட கூடிய டீக்கடைகள், உணவகங்கள், பெரிய, பெரிய வணிக நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், எலக்ட்ரிக் பொருட்கள் விற்கும் கடைகள், செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது.

    குன்னூர் மற்றும் கோத்தகிரி மார்க்கெட் பகுதிகளில் உள்ள காய்கறி, மளிகை கடைகள் மற்றும் இறைச்சி கடைகளும் மூடப்பட்டிருந்தன.

    மாவட்டத்தின் பிற பகுதிகளான மஞ்சூர், பந்தலூர், கூடலூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு ராணுவ வீரர்கள் உயிரிழப்புக்கு தங்கள் துக்கத்தை கடைபிடித்தனர்.

    கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களை சேர்ந்த பொதுமக்கள், ஓட்டுனர்கள், வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்பட அனைவரும் திரண்டு கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு வந்தனர்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு முக்கிய சாலைகள் வழியாக மவுன ஊர்வலமாக சென்று ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் உள்பட மாவட்டம் முழுவதும் 150க்கும் அதிகமான தனியார் பஸ்கள் இயங்கி வருகிறது. இந்த பஸ்களை அதிகளவில் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

    இன்று ஒருநாள் மட்டும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தங்கள் பஸ்களை இயக்காமல் நிறுத்தி வைத்தனர். இதனால் தனியார் பஸ்கள் இன்று ஓடவில்லை.இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்களும், 4 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா வாகனங்களும் இயங்கவில்லை.

    மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அரசு பஸ்கள் மட்டுமே வழக்கம்போல் இயங்கின. தனியார் பஸ் மற்றும் ஆட்டோ போன்ற எந்த வாகனமும் இயங்கவில்லை. நீலகிரிக்கு வாரத்தின் அனைத்து நாட்களுமே சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஆனால் இன்று சுற்றுலா பயணிகள் வருகையும் மிகவும் குறைவாகவே இருந்தது.

    Next Story
    ×