search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
    X
    சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

    கொளத்தூர் கபாலீஸ்வரர் கல்லூரியில் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு- அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

    கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகின்ற கல்வியாண்டில் மாணவர்களின் சேர்க்கை ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னை:

    கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைவ சித்தாந்த சான்றிதழ் பயிற்சி வகுப்புகளை இன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 2-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கி வைத்தார்.

    இந்த கல்லூரியில் பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய 4 பாட பிரிவுகள் உள்ளன. தற்போது, சைவ சித்தாந்தம் சான்றிதழ் படிப்பிற்கான புதிய வகுப்பு துவக்கிட சென்னை பல்கலைகழகத்தின் அனுமதி பெறப்பட்டு, 100 மாணவ மாணவியர்கள் சேர்க்கை முடிக்கப்பட்டுள்ளது.

    சைவ சித்தாந்த சான்றிதழ் வகுப்பு தொடங்குவதற்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு, கல்வியை தந்து கட்டணத்தை அளித்த முதல்-அமைச்சருக்கு இத்துறையின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வருகின்ற கல்வியாண்டில் மாணவர்களின் சேர்க்கை ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகுப்பிற்கு மாணவர்கள் வருவார்களா, என கேள்வி எழுப்பப்பட்டது. இதன் தொடக்க விளம்பரம் வெளியிடப்பட்டு 4 நாட்களிலே 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.

    இந்த கல்லூரி இப்பகுதியில் உள்ள மாணவ-மாணவிகளின் பொருளாதார சூழ்நிலையை நல்ல நிலைக்கு உயர்த்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    தமிழ்நாட்டில் தான் நல்ல பல பணிகளுக்கு இடையூறுகள் அதிகமாக ஏற்படுகின்ற சூழ்நிலை நிலவிக்கொண்டுள்ளது. ஏதோ இந்த கல்லூரி ஆரம்பித்து விட்டோம் 284 பேர் படிக்கிறார்கள் என்று சாதாரணமாக நினைத்துவிட்டால் கூட அதற்கு பின்னால் இக்கல்லூரி அமைவதற்கு என்னவெல்லாம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை கூர்ந்து பார்த்தால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இக்கல்லூரியை கொண்டு வரவேண்டுமா என்று நினைக்கக்கூடிய அளவிற்கு பல வகையில் பல தொந்தரவுகள் ஏற்பட்டன.

    ஆனால் இந்த இடையூறுகளை எல்லாம் தாண்டி இக்கல்லூரியை ஆரம்பித்து இருக்கிறோம் என்றால் எல்லா தடைகற்களையும் படிகற்களாக மாற்றிய பெருமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சாரும்.

    இந்த கல்லூரிக்கு அனுமதி அளிக்க கூடாது என்ற இடையூறுகளையும் தாண்டி நீதியரசர்கள் வழிகாட்டுதலின்படி கல்லூரியில் சைவ சித்தாந்த வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் படிப்பை முறையாக கற்று மாணவர்கள் நல்ல நிலைக்கு வரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்வில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி. சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சக்கரவர்த்தி, வைணவ கல்லூரி முதல்வர் சந்தோஷ்பாபு, கொளத்தூர் எவர்கிரீன் மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர் புருதோத்தம்மன், கூடுதல் ஆணையர் ஹரிப்ரியா, இணை ஆணையர் காவேரி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×