search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பட்டியல்
    X
    வாக்காளர் பட்டியல்

    நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7 ஆயிரம் பேர் விண்ணப்பம்

    நீலகிரி மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7,008 பேர் விண்ணப்பம் அளித்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. கடந்த நவம்பர் 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வருகிற 1.1.2022-ந் தேதி தகுதி நாளாக கொண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் ஒரு மாதம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற விண்ணப்பங்களை பெற கடந்த 13, 14-ந் தேதிகள், கூடுதலாக 20, 21-ந் தேதிகள், 27, 28-ந் தேதிகள் என 3 வாரம் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

    நீலகிரியில் வாக்குச்சாவடி அமைவிடங்களான 370 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு பெயர் இருப்பதை உறுதி செய்தும், திருத்தங்களையும் மேற்கொண்டனர்.

    நீலகிரியில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு முகாம்களில் புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6, நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தம் மேற்கொள்ள படிவம் 8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 ஏ ஆகியவற்றை பெற்று வாக்காளர்கள் பூர்த்தி செய்து விண்ணப்பித்தனர்.

    சிறப்பு முகாம்களில் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2,198 பேர், கூடலூர் தொகுதியில் 3,048 பேர், குன்னூர் தொகுதியில் 1,762 பேர் என மொத்தம் 7,008 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கம் செய்வதற்கு ஊட்டி தொகுதியில் 987 பேர், கூடலூர் தொகுதியில் 404 பேர், குன்னூர் தொகுதியில் 316 பேர் என மொத்தம் ஆயிரத்து 707 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய ஊட்டி தொகுதியில் 317 பேர், கூடலூர் தொகுதியில் 916 பேர், குன்னூர் தொகுதியில் 404 பேர் என மொத்தம் ஆயிரத்து 637 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    திருத்தம் மேற்கொள்ள ஊட்டி தொகுதியில் 338 பேர், கூடலூர் தொகுதியில் 496 பேர், குன்னூர் தொகுதியில் 435 பேர் என மொத்தம் 1,269 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    சிறப்பு முகாம்கள் மூலம் ஊட்டி தொகுதியில் 3,840, கூடலூர் தொகுதியில் 4,864, குன்னூர் தொகுதியில் 2,917 என மொத்தம் 11 ஆயிரத்து 621 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி வருகிற ஜனவரி 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×