search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தைகளுக்கு உணவு பரிமாறிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
    X
    குழந்தைகளுக்கு உணவு பரிமாறிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

    புதுச்சேரிக்கு மத்திய அரசு போதிய வெள்ள நிவாரணம் வழங்கும் -துணைநிலை ஆளுநர்

    சமீபத்தில் புதுச்சேரிக்கு வந்திருந்த மத்தியக் குழுவிடம், புதுச்சேரிக்கு போதுமான நிதியை வழங்க வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தியதாக துணைநிலை ஆளுநர் தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவையில் பெய்து வரும் கனமழை காரணமாக, நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதுவையில் 104.72 செ.மீ. மழை பெய்துள்ளது. நேற்று காலை 237.6 செ.மீ மழை பெய்துள்ளது. இது ஆண்டு சராசரியை விட 75 சதவீதம் அதிகமாகும். தொடர் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் முகாமில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஆய்வு செய்தார். அங்குள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மதிய உணவு பரிமாறினார். மேலும்,  உணவின் தரத்தை அறிவதற்கு குழந்தைகளோடு அமர்ந்து உணவு அருந்தினார். மேலும் குழந்தைகளுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், எழுது பொருட்களை வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மற்றும் காரைக்கால் மக்களுக்கு மத்திய அரசு போதுமான நிதியை வழங்கும் என உறுதி அளித்தார்.

    குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

    ‘சமீபத்தில் புதுச்சேரிக்கு வந்திருந்த மத்தியக் குழுவிடம், புதுச்சேரிக்கு போதுமான நிதியை வழங்க வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தியது. புதுச்சேரிக்கு போதுமான நிதியை உறுதி செய்வதற்காக, உள்துறை மந்திரி அமித் ஷாவையும் தொடர்பு கொண்டு பேசினேன். நிலைமையைச் சமாளிக்க போதுமான நிதியை மத்திய அரசு வழங்கும் என நம்புகிறேன். மழையினால் சேதமடைந்த உள்கட்டமைப்புகளும் சீரமைக்கப்படும்’ என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

    இடைக்கால நிவாரணமாக புதுச்சேரிக்கு 300 கோடி ரூபாய் வழங்கவேண்டும் என மத்திய அரசிடம் மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×