search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாம்பன் பாலத்தில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வந்த வாகனங்கள்
    X
    பாம்பன் பாலத்தில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வந்த வாகனங்கள்

    தொடர் மழை எதிரொலி- ராமநாதபுரத்தில் 3வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் எங்கும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இடைவிடாது தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழையாக பெய்து வருகிறது.

    சில நேரம் சாரல் மழையாகவும், இரவு நேரங்களில் கனமழையாகவும் பெய்து வருகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் எங்கும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட புறநகர் பகுதிகளில் வடிகால் வசதி இல்லாததாலும் தண்ணீர் செல்ல வழி இல்லாததாலும் நீர்வழி பாதைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளதாலும் தண்ணீர் செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக நீர்நிலைகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் மழைவெள்ளம் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    எங்கு பார்த்தாலும் வீடுகள் மற்றும் குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி குளம்போல நிற்கிறது.

    மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லிமீட்டரில்) விவரம் வருமாறு:-

    ராமநாதபுரம்-32, மண்டபம்-33.89, ராமேசுவரம்- 38.20, பாம்பன்-28.70, தங்கச்சிமடம்-47.30, பள்ளமோர்குளம்-38, திருவாடானை-21.40, தொண்டி-31.80, வட்டாணம்-21.10, ஆர்.எஸ்.மங்கலம்-25, பரமக்குடி-66.70, முதுகுளத்தூர்-20, கமுதி-45.40, கடலாடி-22.20, வாலிநோக்கம்-15.

    மாவட்டத்தின் மொத்த மழை அளவு 534.30, சராசரி-33.3 மில்லி மீட்டர். இன்று காலை முதல் தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.

    தொடர் மழை காரணமாக ராமநாதபுரத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. 3-வது நாளாக மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களிலும் நேற்று ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
    Next Story
    ×