search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மண் சரிவு சீரமைக்கப்பட்டதால் இன்று காலை முதல் போடி மெட்டு மலைச்சாலையில் வாகனங்கள் இயங்கத்தொடங்கின.
    X
    மண் சரிவு சீரமைக்கப்பட்டதால் இன்று காலை முதல் போடி மெட்டு மலைச்சாலையில் வாகனங்கள் இயங்கத்தொடங்கின.

    போடி மெட்டு மலைச்சாலையில் சீரமைப்பு பணிகளுக்கு பின் இன்று மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதி

    போடி மெட்டு மலைச்சாலையில் மண் சரிவுகள் சீரமைக்கப்பட்டு இன்று காலை முதல் மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    மேலச்சொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு போடிநாயக்கனூர் பகுதியில் 13 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதனால் போடி மெட்டு மலைச்சாலையில் பல்வேறு இடங்களில் பாறைகள் உருண்டும், மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையின் நடுவே விழுந்தது.

    இதனால் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டது. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தோட்ட வேலைக்கு செல்பவர்கள், பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கூட அனுமதிக்கப்படவில்லை.

    மேலும் இருசக்கர வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு நேற்று காலை முதல் இரவு வரை முழு வீச்சில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கேரளாவில் இருந்து வந்தவர்களும் போடிமெட்டு சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

    நேற்று இரவு வரை நடந்த சீரமைப்பு பணிகள் முடிவடைந்தது. மேலும் தற்போது மழையும் குறைந்துள்ளதால் போடி மெட்டு வழியாக கேரளாவுக்கு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்தனர்.

    இதனால் வாகன ஓட்டிகள் இன்று காலை முதல் மலைச்சாலையில் பயணிக்க தொடங்கினர். மணல், கருங்கல், ஜல்லி, விறகு போன்ற அதிக எடை ஏற்றிச்செல்லும் 12 சக்கரம் உடைய கனரக வாகனங்கள் மலைச்சாலையில் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகளால் மண் சரிவு ஏற்படுவதாகவும், இதுபோன்ற வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×