search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

    புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதால் தமிழகத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மழை பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது.

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, நெல்லை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

    இடைவிடாது கொட்டிய கனமழையால் சென்னை உள்பட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. சென்னையில் முக்கிய சாலைகளில் வெள்ளம் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியதால் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தவிப்புக்குள்ளானார்கள். மழை நின்றாலும் இன்னும் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சென்னை எழும்பூர், திருவொற்றியூர், பெரம்பூர், புரசைவாக்கம், கொடுங்கையூர், தாம்பரம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணாசாலை, வேப்பேரி உள்பட பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது.

    இதேபோன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.

    இந்தநிலையில் தமிழகத்தில் மீண்டும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகிறது. அது மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது.

    இலங்கை மற்றும் தெற்கு தமிழ்நாடு நோக்கி இந்த காற்றழுத்த தாழ்வு நிலை பயணிக்கும். இதன் காரணமாக தமிழக- ஆந்திர கடலோர பகுதி, அந்தமான்- நிக்கோபார் தீவுகளில் 5 நாட்கள் கனமழை பெய்யும் என இந்திய வானிலை இலாகா அறிவித்துள்ளது.

    புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதால் தமிழகத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மழை பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேற்று காணொலி மூலம் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர் மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளின் கொள்ளளவு மற்றும் இருப்பை தொடர்ந்து கண்காணிக்கவும், மழை நீரை தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் கடலோர பகுதிகளில் 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


    Next Story
    ×