search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,387 ஹெக்டேர் பயிர்கள் நாசம்
    X
    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,387 ஹெக்டேர் பயிர்கள் நாசம்

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,387 ஹெக்டேர் பயிர்கள் நாசம்

    வேலூர் மாவட்டத்தில் மொத்த சேத மதிப்பு தோராயமாக ரூ.199 கோடியை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    வேலூர்

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வெள்ள சேத பாதிப்புகளை மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

    மத்திய நிதியமைச்சக ஆலோசகர் ஆர்.பி.கவுல் தலைமையில் மத்திய நீர்வள ஆதார முகமையின் இயக்குநர் தங்கமணி மற்றும் பவ்யா பாண்டே ஆகியோருடன் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், தமிழ்நாடு மின் ஆளுமை நிர்வாக இணை இயக்குநர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களிடம் மழை வெள்ள சேத பாதிப்புகள் குறித்து கூறப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர். 9 கால்நடைகள், 14 ஆயிரத்து 800 கோழி குஞ்சுகள் உயிரிழந்துள்ளன. மழைக்கால நிவாரண முகாம்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். 627 வீடுகள் பகுதியாகவும், 72 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார பிரிவு கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் மொத்தம் 2.32 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தொடர் மழையால் 101 ஏரிகளில் 83 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

    அதேபோல், மாவட்டம் முழுவதும் 68 இடங்களில் 101.08 கி.மீ சாலைகள் சேதமடைந்துள்ளன. 16 தரைப்பாலங்கள், சிறுபாலங்கள், 30 ஏரி, குளங்கள், ஊரணிகள் சேமதடைந்துள்ளன. 9 மேல்நிலை குடிநீர் தொட்டிகள், 38 ஆழ்துளை கிணறுகள், 16,457 மீட்டர் தொலைவுக்கு குடிநீர் குழாய்கள், 18 திறந்தவெளி கிணறுகள் சேதமடைந்துள்ளன.

    மாவட்டத்தில் நெற்பயிர்களுடன் தோட்டக்கலை பயிர்கள் என மொத்தம் 606.95 ஹெக்டேர் அளவுக்கு சேதமடைந்துள்ளன.பாதிப்பு கணக்கெடுக்கும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை.

    தொடர்ந்து நடந்து வருவதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார். வேலூர் மாவட்டத்தில் மொத்த சேத மதிப்பு தோராயமாக ரூ.199 கோடியை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்புகளால் வேளாண்மை துறையின் 2781 ஹெக்டேர் வேளாண் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. 2050 ஹெக்டேர் வேளாண்மை பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. 382 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது.

    வேளாண்துறை சேதங்களுக்கு ரூ.3.29 கோடி. தோட்டக்கலை துறைக்கு ரூ.52 லட்சம், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறைக்கு ரூ.11.8 கோடி, நெடுஞ்சாலை துறைக்கு ரூ.5.4 கோடி. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.5.38 கோடி, ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.2.18 கோடி.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ரூ.1 கோடி. பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் மருத்துவ கட்டிடங்கள் ரூ.1 கோடியே 27 லட்சம், வருவாய்த்துறைக்கு ரூ.78 லட்சமும் என மொத்தமாக ரூ.29 கோடியே 44 லட்சம் மதிப்பிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளது என மத்திய குழுவிற்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×