search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளாஸ்டிக் கைப்பை
    X
    பிளாஸ்டிக் கைப்பை

    பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் வெகுமதி

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறித்து தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஏ.உதயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மோகோல் கோப்பைகள், உணவுப்பொருட்களை பார்சல் செய்ய பயன்படுத்தும் பிளாஸ்டிக் பேப்பர்கள், குடிநீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவற்றை தயாரிப்பது, விற்பது, உபயோகிப்பது, வினியோகிப்பது, சேமித்து வைப்பது, போக்குவரத்து செய்வது போன்றவை தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை ஐகோர்ட்டு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகியவை தொடர்ந்து அரசுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

    பிளாஸ்டிக் தடையை செயல்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆய்வு மற்றும் புகார் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை கண்டறிந்து அதனை மூடுவதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

    இருப்பினும் சட்டவிரோதமாக செயல்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது.

    எனவே, சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு அருகில் குடியிருப்பவர்கள், சட்டவிரோதமாக இயங்கும் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் குறித்த தகவலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அந்தந்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களிடம் புகார் அளிக்கலாம். https://tnpcb.gov.in/contact.php என்ற இணையதள முகவரியிலும், மின்னஞ்சல், கடிதம், செல்போன், வாட்ஸ் அப் வாயிலாகவும் புகாரை பதிவு செய்யலாம்.

    புகார் அளிப்பவர்கள் தங்களது பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதில் பங்கு பெறும் சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்களுக்கு பாராட்டும், வெகுமதியும் அளிக்கப்படும். தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×