search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரங்கசாமி
    X
    ரங்கசாமி

    மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.5 ஆயிரம்- ரங்கசாமி அறிவிப்பு

    புதுவையில் ஏற்பட்ட மழை பாதிப்பு கணக்கெடுப்பு முடிந்து எவ்வளவு பாதிப்பு என தெரிந்த பின் மத்திய அரசிடம் முழு நிவாரணம் கேட்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி வந்த மத்திய குழுவினர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டசபை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினர்.

    சந்திப்பு முடிந்த பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுச்சேரி மாநிலத்தில் வழக்கமாக ஆண்டுக்கு 130 செ.மீ. மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக 180 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பியுள்ளன.

    சங்கராபரணி ஆறு, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசு சார்பில் அவர்களுக்கு உணவு வழங்கப் பட்டது. ஏராளமான வீடுகளும் சேதமடைந்துள்ளன.

    பாகூர் பகுதியில் மட்டும் சுமார் 7 ஆயிரம் ஹெக்டேர் அளவிலான நெற்பயிர், காய்கறி உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.

    இதனால் கூலித்தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், விவசாய கூலி தொழிலாளிகள், மீனவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் மத்திய குழுவினர் புதுச்சேரி வந்துள்ளனர். வெள்ள சேத பகுதிகளை அவர்கள் நாளை (இன்று) பார்வையிட உள்ளனர்.

    புதுச்சேரியில் பெய்த தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு புதுவைக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.300 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அரசு முறை பயணமாக டெல்லி சென்றிருந்த பொதுப்பணித்துறை அமைச்சரும், மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து இதை வலியுறுத்தியுள்ளார்.

    தற்போது புதுவையில் ஏற்பட்ட மழை பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பு முடிந்து எவ்வளவு பாதிப்பு என தெரிந்த பின் மத்திய அரசிடம் முழு நிவாரணம் கேட்கப்படும். நாம் கேட்கும் நிவாரண தொகையை மத்திய அரசு புதுவைக்கு வழங்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட சிவப்புநிற ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மஞ்சள் நிற ரேஷன்கார்டுகளுக்கும் மழைநிவாரணம் வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று மஞ்சள்நிற ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்த 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரை அடுத்த வாரம் முதல் ரேஷன்கடைகளில் வினியோகம் செய்யப்படும். எங்கள் அரசு சொன்னதை செய்யும். அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×