search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் கெடிலம் ஆற்றில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை காணலாம்
    X
    கடலூர் கெடிலம் ஆற்றில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை காணலாம்

    தென்பெண்ணையாறு கரையில் உடைப்பு- 6 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

    கடலூரில் தென்பெண்ணையாறு வழியாக வினாடிக்கு 1¼ லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கரையில் உடைப்பு ஏற்பட்டு 6 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அடைமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது.

    இதனால் கெடிலம், தென்பெண்ணையாறு, பரவனாறு, மணிமுக்தா, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 51 ஆயிரம் கனஅடி நீர் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டது. கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நீர்வரத்து வாய்க்கால்கள், ஓடைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைவெள்ளமும், தென்பெண்ணையாற்றில் கலந்தது. இதனால் நேற்று தென்பெண்ணையாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காலை 1 லட்சம் கனஅடி நீர் சென்ற நிலையில், மாலை நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீா் செல்கிறது. இதனால் பல இடங்களில் தென்பெண்ணையாற்றங்கரை நிரம்பி குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

    கடலூர் குண்டுசாலை, குண்டு உப்பளவாடி பகுதிகளில் தென்பெண்ணையாற்றங்கரையில் நேற்று காலை உடைப்பு ஏற்பட்டது. இதில் அந்த பகுதிகளில் உள்ள சுமார் 6 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த பொதுமக்கள், உடனே தங்கள் வீடுகளில் உள்ள அத்தியாவசிய பொருட்களை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள முகாம்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் சென்றனர். சிலர் வீட்டு மாடிகளில் தஞ்சமடைந்தனர்.

    கடலூர் பெரிய கங்கணாங்குப்பத்தில் உள்ள தனியார் விடுதியையும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் விடுதியை விட்டு வெளியேற முடியாமல் 32 மாணவிகள், 4 பெண் ஊழியர்கள் தவித்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் படகுடன் விரைந்து சென்று, விடுதியில் சிக்கிய 32 மாணவிகள் மற்றும் 4 பெண் ஊழியர்களை படகு மூலம் பத்திரமாக மீட்டு வந்தனர்.

    மேலும் குமரப்பன் நகர், வெளிசெம்மண்டலம் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அப்பகுதியில் வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இவர்களையும் தீயணைப்பு மற்றும் மீட்புபடையினர் 5 படகுகளுடன் சென்று மீட்டனர்.

    இவ்வாறாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 10 ஆயிரம் பேர் கே.என்.பேட்டை, பெரிய கங்கணாங்குப்பம், வன்னியர்பாளையத்தில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×