search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிள்ளைச்சாவடி கிராமத்தில் கடல் அரிப்பினை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டபோது எடுத்தபடம்
    X
    பிள்ளைச்சாவடி கிராமத்தில் கடல் அரிப்பினை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டபோது எடுத்தபடம்

    மழை சேதங்களை பார்வையிட மத்தியக்குழு நாளை மறுநாள் வருகை- கவர்னர் தகவல்

    மழை சேதங்களை ஆய்வு செய்ய மத்தியக்குழு நாளை மறுநாள் புதுச்சேரி வர உள்ளதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவையில் பெய்த மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக பிள்ளைச்சாவடி மீனவர் கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நேரில் பார்வையிட்டார். அப்போது சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் கடும் மழையினாலும், கடல் அரிப்பினாலும் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரிடம் கூறினார்கள். அரசு உரிய நடவடிக்கையும், நிவாரணமும் அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

    கடல் அரிப்பினை பார்வையிட்ட கவர்னர் அங்கிருந்தபடியே மத்திய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புவிசார் அறிவியல் மந்திரி ஜிதேந்திர சிங்கை செல்போனில் தொடர்பு கொண்டு கடல் அரிப்பால் கடலோர கிராமங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை விளக்கி கூறினார். மத்திய மந்திரியும் உடனடியாக குழுவினை அனுப்பி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    அதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் காணொளி வாயிலாக புதுச்சேரி அதிகாரிகளுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தி உள்ளார். இப்போது ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு குறித்து பேசியதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதாக உறுதியளித்துள்ளார். கடல் அரிப்புக்கு நிரந்தர தீர்வு கிடைப்பதற்கான அத்தனை முயற்சிகளும் புதுவை அரசு சார்பில் மேற்கொள்ளப்படும்.

    மழை வெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்ய மத்தியக்குழு நாளை மறுதினம் (திங்கட்கிழமை) புதுவை வர உள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மணவெளி தொகுதி நோணாங்குப்பம் கிராமத்தில் வெள்ளத்தால் சூழப்பட்ட என்.ஆர்.நகரை பார்வையிட்டார். அங்கிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார். அங்கு 184 பெரியவர்கள், 54 சிறுவர்-சிறுமியர், 5 குழந்தைகள் உள்பட 243 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    நிவாரண முகாமில் பணியில் இருந்த மருத்துவக்குழுவிடம் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தவும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார். அப்போது சபாநாயகர் செல்வம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
    Next Story
    ×