என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் டி.எம்.எப். தரைப்பாலத்தில்  மழைநீர் தேங்கியுள்ளதை  படத்தில் காணலாம்.
    X
    திருப்பூர் டி.எம்.எப். தரைப்பாலத்தில் மழைநீர் தேங்கியுள்ளதை படத்தில் காணலாம்.

    திருப்பூரை புரட்டி போட்ட மழை-வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் இரவு முழுவதும் தவித்த பொதுமக்கள்

    புஷ்பா ரவுண்டானா, ஸ்ரீ சக்தி தியேட்டர் ரவுண்டானா, காலேஜ் ரோடு, மரக்கடை ஸ்டாப் ரெயில்வே பாலம் உள்ளிட்ட பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளமாக ஓடியதால் வாகன ஓட்டிகள் தயங்கி நின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நேற்று மாலை  முதல் 4 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் நொய்யல் ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு, வெள்ளம் பாய்ந்தோடியது. திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள  12 அடி உயர தரைப்பாலத்தை தொட்டவாறு வெள்ளம் சென்றதால் அப்பாலத்தின் வழியாக சென்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.

    புஷ்பா ரவுண்டானா, ஸ்ரீ சக்தி தியேட்டர் ரவுண்டானா, காலேஜ் ரோடு, மரக்கடை ஸ்டாப் ரெயில்வே பாலம் உள்ளிட்ட பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளமாக ஓடியதால் வாகன ஓட்டிகள் தயங்கி நின்றனர். 4 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்த மழையால் முக்கிய சந்திப்பு, வீதிகளில் கனரக, மோட்டார் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    குறிப்பாக, பி.என்.,ரோடு, ஊத்துக்குளி ரோடு, பல்லடம் ரோடு, அவிநாசி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பெய்யும் மழையில் வாகன ஓட்டிகள் நனைந்தபடி அப்படியே நின்றனர். ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பல இடங்களில் பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று பெய்த கனமழையால் இப்பணி நடக்குமிடங்களில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது.

    திருப்பூரில் நேற்று மாலை முதல்  4 மணி நேரம் இடைவிடாமல் மழை பெய்தது. இதனால் திருப்பூர் சாலைகளில் ஆறு போல் வெள்ளம் பாய்ந்தோடியதை படத்தில் காணலாம்.

    திருப்பூர் மாநகராட்சி, 20 வது வார்டு, போயம் பாளையம், ஏ.டி., காலனிக்குள் மழைநீர் புகுந்து வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. பி.என்., ரோடு, பிச்சம்பாளையம் புதூர் நால்ரோடு சந்திப்பில் சாக்கடை கால்வாய் நிரம்பி சாலை எதுவென்றே தெரியாத வகையில் மழைநீர் ஆறாக பாய்ந்தோடியது. மழை சற்று குறைந்த பின்பும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஊத்துக்குளி ரோடு, ஒற்றைக்கண் பாலம், டி.எம்.எப்., சுரங்கபாலத்தில் நான்கு அடி உயரத்துக்கு மழைநீர் ஆறு போல் பாய்ந்தது.

    காலேஜ் ரோடு-மங்கலம் ரோடு இணைக்கும் அணைப்பாளையம், தரைப் பாலத்தில் காட்டாறு போல் வெள்ளம் கடந்து சென்ற தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. யூனியன் மில் ரோடு, சக்தி சினிமாஸ் ரவுண்டானாவில், மழை வெள்ளத்தில் 3 கார்கள் மூழ்கின. தெற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மீட்டனர்.

    தாராபுரம் வள்ளுவர் தெருவில் மளிகைக்கடை ஒன்றில் நீர் புகுந்ததால் கடை முற்றிலும் மழைநீரால் நனைந்து பொருட்கள் சேதமடைந்தன. அதே பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மழைநீர் புகுந்தது. குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியே வந்து தங்க இடமின்றி தவித்தனர். வசந்தம் நகர் பகுதியில்  40க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வசித்து வந்தனர்.

    மழையால் வீடுகளின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. சில வீடுகள் மண்ணில் புதைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள்  தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். சம்பவம் குறித்து தாராபுரம்  சப்-கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வட்டாட்சியர் சைலஜா, நகராட்சி ஆணையாளர் சங்கர், துணை கண்காணிப்பாளர் தனராசு ஆகியோர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    தாராபுரத்தில் வீடு இடிந்துள்ளதை படத்தில் காணலாம்.

    மேலும் பாதிக்கப்பட்ட பொதுமக்களை தனியார் மண்டபங்களில் தங்க வைத்தனர். மழைசேத விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தாராபுரம் பகுதியில் இதுவரை 3 வீடுகள் இடிந்துள்ளன. 10க்கும்  மேற்பட்ட  வீடுகளில் காம்பவுண்டு சுவர்இடிந்துள்ளது. உடுமலை அமராவதி அணையில் இருந்து  9ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் தாராபுரம் அமராவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெப்ப அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கரையோர பகுதி பொதுமக்கள் மேடான பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    கரையோர பகுதியில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மும்மூர்த்திநகர், கருப்பராயன்நகர் பகுதியில் உள்ள  வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. போயம்பாளையம் அவினாசி நகர் செல்லும் சாலையில் கிணற்றின் சுற்றுசுவர் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. 
    Next Story
    ×