search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பஞ்சு, நூலை ஏற்றுமதி செய்யாமல் ஆயத்த ஆடையாக மாற்றி வர்த்தகம் செய்ய வேண்டும் - சைமா வலியுறுத்தல்

    பருத்தி பஞ்சை பதுக்கி வைப்பது போல், அதிக அளவு இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்க அனுமதிக்க கூடாது.
    திருப்பூர்:

    நூல் விலை உயர்வால் திருப்பூர் பின்னலாடை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் தொழில்துறையினர் கவலை தெரிவித்திருந்த நிலையில், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழக அரசுக்காக தலைமை செயலாளர் கடிதம் எழுதியதை தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர்.

    தொழில்துறையினர் வேண்டுகோளை ஏற்று, கடிதம் எழுதிய தமிழக தலைமை செயலாளருக்கு தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் (சைமா) சங்க தலைவர் ஈஸ்வரன், அனுப்பியுள்ள கடிதத்தில், திருப்பூர் பின்னலாடை தொழில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், லட்சக்கணக்கான மக்களின் வேலை வாய்ப்புக்கும் ஆதாரமாக இருக்கிறது.

    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய பருத்தி கழகம் (சி.சி.ஐ.,) கடைப்பிடிக்கும் தவறான கொள்கையால், நூல் விலை மூன்று மாதங்களுக்கு கூட ஸ்திரமாக இருப்பதில்லை. பருத்தி விளைச்சல் நன்றாக இருக்கும் போது, விவசாயிகளிடம் வாங்கி அதிக அளவு இருப்பு வைக்கின்றனர். 

    தட்டுப்பாடு ஏற்படும் போதுவிலையை உயர்த்தி விற்கப்படுகிறது. பருத்தி வியாபாரிகளும் இருப்பு வைத்து அதிக லாபம் அடைகின்றனர். சிறு, குறு மற்றும் நடுத்தர நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சு கிடைப்பதில்லை.

    உள்நாட்டு தேவையை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், பஞ்சு, நூல்  ஏற்றுமதி செய்யவும் அனுமதிக்கப்படுகிறது. உள்நாட்டு தேவை பூர்த்தியாகாததால் தட்டுப்பாடு ஏற்பட்டு பஞ்சு, நூல் விலை தொடர்ந்து உயர்த்தப்படுகிறது.

    பின்னலாடை உற்பத்தியாளர்கள் ஒப்பந்தம் செய்த விலைக்கு ஆடைகளை உற்பத்தி செய்து கொடுக்க முடியாமல் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே பருத்தி பஞ்சை பதுக்கி வைப்பது போல், அதிக அளவு இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்க அனுமதிக்க கூடாது.

    உள்நாட்டு தேவைகளுக்கு ஒதுக்கியது போக மீதியுள்ள பஞ்சு மற்றும் நூலிழைகளை மட்டும் ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும். பஞ்சு, நூல் என மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்வதை காட்டிலும் ஆயத்த ஆடையாக மாற்றி வர்த்தகம் செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும். 

    இத்தகைய நிலை உருவானால் மட்டுமே பின்னலாடை தொழில் ஆரோக்கியமாக நிலைபெறும். தொழில்துறையினரின் இத்தகைய கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்துக்கு மீண்டும் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×