search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடுகள் இடிந்ததில் சேதமடைந்த மோட்டார் சைக்கிள்கள்-கார்களை காணலாம்
    X
    வீடுகள் இடிந்ததில் சேதமடைந்த மோட்டார் சைக்கிள்கள்-கார்களை காணலாம்

    மழைக்கு ஒரே நாளில் மேலும் 114 வீடுகள் இடிந்தது

    குமரி மாவட்டம் முழுவதும் மழைக்கு இதுவரை 613 வீடுகள் இடிந்து விழுந்து இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 116 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    தற்பொழுது மழை குறைந்ததை அடுத்து வீடுகளை சூழ்ந்த வெள்ளம் வடிந்து வருகிறது. முஞ்சிறை பார்த்திபபுரம், வைக்கலூர் பகுதிகளில் மட்டும் இன்னும் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் வடியவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும் இன்று காலை நிலவரப்படி 15 நிவாரண முகாம்களில் 700 பேர் தங்கியுள்ளனர்.

    நிவாரண முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் மழைக்கு இதுவரை 613 வீடுகள் இடிந்து விழுந்து இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 116 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது. இதையடுத்து மழைக்கு சேதமடைந்த வீடுகள் எண்ணிக்கை 729 ஆக உயர்ந்துள்ளது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 45 வீடுகளும், கல்குளத்தில் 13 வீடுகளும், விளவங்கோடு 39 வீடுகளும், திருவட்டாரில் 17 வீடுகளும் சேதமடைந்துள்ளது.

    நாகர்கோவில் முதலியார் மேற்கு தெரு பகுதியில் இன்று அதிகாலை வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் பக்கத்து வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்தது. இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீடு இடிந்து விழுந்ததில் சேதமடைந்த மோட்டார் சைக்கிள்களை அப்புறப்படுத்தினார்கள். மேலும் மீட்பு பணிகளையும் அவர்கள் மேற்கொண்டனர்.

    மழை குறைந்ததை அடுத்து பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்து வருகிறது. அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்து வருவதை அடுத்து அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.37 அடியாக உள்ளது. அணைக்கு 1891 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து1757 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 74.05 அடியாக உள்ளது. அணைக்கு 1899 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 3192 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பொய்கை மாம்பழத்துறையாறு அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 4 அணைகளில் இருந்தும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குழித்துறை ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.




    Next Story
    ×