search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)
    X
    கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

    குமரி மாவட்டத்தில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம்- கலெக்டர் அரவிந்த் தகவல்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், களப் பணியாளர்கள் மூலமாகவும், சோதனைச் சாவடிகள் மூலமாகவும் இதுவரை 12,85,161 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு உத்தரவின்படி நாளை (14-ந்தேதி) மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில், 1,00,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுவரையிலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் பொதுமக்களின் வசதிக்காக அனைத்து நாட்களிலும் அரசு கூடுதல் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இயங்கும். அரசு ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் 24 மணி நேரமும் இயங்கும். பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் அனைத்து துணை சுகாதார மையங்களுக்குட்பட்ட கிராம பகுதிகளில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி மருந்து கோவிஷீல்டு 92,900 டோஸ் மற்றும் கோவாக்சின் 54,740 டோஸ் இருப்பில் உள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், களப் பணியாளர்கள் மூலமாகவும், சோதனைச் சாவடிகள் மூலமாகவும் இதுவரை 12,85,161 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தற்போது மொத்தம் 62 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 20 பேரும், கோவிட் கவனிப்பு மையங்களில், தனியார் மருத்துவமனைகளில் 42 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

    கடந்த 11-ந்தேதி அன்று 9 நபர்களுக்கு கொரோனா நோய்த்தோற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 60,022 பேர். இதில் 57,852 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் கட்ட தடுப்பு மருந்து 1457 நபர்களுக்கும், 2-வது கட்ட தடுப்பு மருந்து 6448 நபர்களுக்கும், ஆக மொத்தம் இதுவரை நீரழிவு நோய், இணை நோய் உள்ளவர்கள் 61,565 நபர்களுக்கும், கர்ப்பிணி பெண்கள் 17,361 நபர்களுக்கும், பாலூட்டும் பெண்கள் 16,607 நபர்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை முதல் கட்ட தடுப்பு மருந்து 10,84,637 நபர்களுக்கும், 2-வது கட்ட தடுப்பு மருந்து 4,90,183 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் முக கவசம் அணியாதது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக இன்று மட்டும் 41 நபர்களுக்கு அபராதமாக ரூ. 8,500 வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,28,211 நபர்களுக்கும் அபராதமாக ரூ. 2,78,29,162 வசூலிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×