என் மலர்
செய்திகள்

கைதான கொள்ளையர்களை படத்தில் காணலாம்.
2 நாட்களாக நோட்டமிட்டு திருப்பூர் டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் ரூ.9 லட்சம் வழிப்பறி செய்த கொள்ளையர்கள் - பயங்கர ஆயுதங்களுடன் கைது
கடந்த 1-ந்தேதி கடையில் விற்பனையான ரூ. 9.13 லட்சத்தை வங்கியில் செலுத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் ராஜபிரகாஷ் செல்ல முயன்றார்.
திருப்பூர்:
திருப்பூர் நல்லூர் காசிபாளையத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த ராஜபிரகாஷ் மேற்பார்வையாளராகவும், ரமேஷ் என்பவர் விற்பனையாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 1-ந்தேதி கடையில் விற்பனையான ரூ. 9.13 லட்சத்தை வங்கியில் செலுத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் ராஜபிரகாஷ் செல்ல முயன்றார். அப்போது கடையின் அருகில் 2 இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 9.13 லட்சத்தை வழிப்பறி செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த செந்தில்குமார் ( வயது 21), சிங்கிலிகுளத்தை சேர்ந்த பவித்ரன் (19), அதே ஊரை சேர்ந்த மணி கண்டன் (23), ஈரோடு கருங்கல் பாளையத்தை சேர்ந்த குமார் (30) ஆகிய 4 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தலை மறைவாக இருந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 6.10 லட்சம், பட்டா கத்தி, இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் கிடைத்தது.
இந்த வழக்கில் கைதான செந்தில்குமார் மீது சென்னை, ஈரோடு, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் வழிப்பறி, கொலை தொடர்பாக 33 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல மணிகண்டன், பவித்ரன் மீது நெல்லை, களக்காடு காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.
செந்தில்குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து டாஸ்மாக் கடைகளை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார். நண்பர் குமாரை பார்ப்பதற்காக பவித்ரன், மணிகண்டனுடன் ஈரோடு வந்த செந்தில்குமார் பெருந்துறையில் 2 மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு திருப்பூர் வந்துள்ளனர்.
திருப்பூர் காசிப்பாளையம் டாஸ்மாக் கடையை 4 பேரும் 2 நாட்களாக நோட்ட மிட்டுள்ளனர். அப்போது மேற்பார்வையாளர் ராஜ பிரகாஷ், சனி, ஞாயிறு வங்கி விடுமுறை என்பதால் விற்பனை பணத்தை கடையிலேயே வைத்துள்ளதும், திங்கட்கிழமை பணத்தை வங்கியில் செலுத்த கொண்டு செல்ல இருந்ததும் தெரியவந்தது.
அதன்படி கடந்த 1-ந்தேதி (திங்கட்கிழமை) டாஸ்மாக் கடைக்கு சென்ற 4 பேரும் ராஜ பிரகாஷ் வருகைக்காக காத்திருந்துள்ளனர். அவர் கடைக்கு வந்து ரூ.9.12 லட்சத்தை பேக்கில் எடுத்து கொண்டு வங்கிக்கு புறப்பட்டார். காரில் ஏற முயன்ற போது 4 பேரும் பணம் வைத்திருந்த பேக்கை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இதில் ரூ.2.50 லட்சத்தை குமாரிடம் கொடுத்து விட்டு, 3பேரும் சொந்த ஊரான நெல்லைக்கு சென்றுவிட்டனர். அங்கு நண்பர்களுக்கு மது வாங்கி கொடுத்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்தநிலையில் போலீசார் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகிய காட்சிகளை வைத்து பார்வையிட்ட போது 4 பேரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் வேறு ஏதேனும் கொள்ளை சம்வங்களில் ஈடுபட்டுள்ளனரா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story






