search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணிமுத்தாறு அணை
    X
    மணிமுத்தாறு அணை

    நெல்லை மாவட்டத்தில் 2 அணைகளுக்கு தண்ணீர் வரத்து இல்லை

    பாபநாசம், சேர்வலாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளில் மட்டும் பிசான சாகுபடிக்கு தேவையான தண்ணீர் உள்ளது.
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்தாலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யவில்லை.

    கடந்த மாதம் ஒரே நாளில் பாபநாசம் அணைப்பகுதியில் மட்டும் 27 சென்டிமீட்டர் மழை பெய்தது. இதனால் பாபநாசம் அணை, சேர்வலாறு அணை ஆகியவை ஒரேநாளில் 23 அடி நீர்மட்டம் உயர்ந்தது. இதன் காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகள் மட்டும் நிரம்பும் நிலையை அடைந்துள்ளன.

    நெல்லை மாவட்டத்தில் மிகப்பெரிய அணையான மணிமுத்தாறு அணையின் முழுகொள்ளளவு 5,500 மில்லியன் கனஅடியாகும். இங்கு தற்போது 2,630 மில்லியன் கனஅடி தண்ணீரே உள்ளது.

    அதாவது 50 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் தற்போது 86 அடி நீர்மட்டம் உள்ளது. 90 அடிக்கு பிறகே மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதி அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தற்போது மணிமுத்தாறு அணைக்கு மிகவும் குறைந்த அளவாக விநாடிக்கு 62 கனஅடி தண்ணீர் மட்டுமே வருகிறது.

    நெல்லை மாவட்டத்தின் சிறிய அணையான வடக்கு பச்சையாறு அணையின் உச்சநீர்மட்டம் 50 அடியாகும். அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக நீர்மட்டம் 22 அடியாக உள்ளது. ஆனால் அதன்பிறகு மழை இல்லாததால் தண்ணீர் வரத்து இல்லை. இதனால் அணை நீர்மட்டம் தொடர்ந்து அதே நிலையில் நீடிக்கிறது.

    இதுபோல நம்பியாறு அணையும், உச்சநீர்மட்டம் 22.96 அடியாகும். அங்கு 11.64 அடியே நீர்மட்டம் உள்ளது. அந்த அணைக்கும் தற்போது பெய்த மழையினால் தண்ணீர் வரத்து இல்லை. இன்றுதான் மிகவும் குறைந்த அளவு தண்ணீர் அந்த அணைக்கு செல்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் 6 அணைகள் உள்ளன. இதில் மேற்கண்ட 3 அணைகளில் விவசாயத்திற்கு தேவையான போதிய தண்ணீர் இன்னும் வரவில்லை. பாபநாசம், சேர்வலாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளில் மட்டும் பிசான சாகுபடிக்கு தேவையான தண்ணீர் உள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    அடவிநயினார்-32, கடனாநதி-7, பாபநாசம்-6, சிவகிரி-6, கொடுமுடியாறு-5, ராதாபுரம்-4, கருப் பாநதி-3, தென்காசி-1, சாத்தான்குளம்-3.2.

    Next Story
    ×