search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டின் முன்பு தேங்கியுள்ள மழை நீர்
    X
    வீட்டின் முன்பு தேங்கியுள்ள மழை நீர்

    சென்னையில் 300 இடங்களில் வடியாத வெள்ளம்- தேங்கிய மழை நீரை அகற்றும் பணி தீவிரம்

    சென்னையில் பலத்த மழை பெய்யத்தொடங்கியதில் இருந்து 253 மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. அவை அனைத்தும் உடனுக்குடன் அகற்றப்பட்டு விட்டன.
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கடந்த சனி, ஞாயிற்று கிழமைகளில் பலத்த மழை பெய்தது. இதனால் 300-க்கும் மேற்பட்ட தெருக்களில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் பலத்த மழை பெய்தது. புதன் கிழமை இரவு முதல் பெய்த மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது.

    அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக மாறி சென்னை கடற்கரையை நெருங்கியது. சென்னையில் 30 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாத மழை பெய்தது. புதன்கிழமை காலை 6 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரை சென்னையில் 169 மி.மீட்டர் மழை பெய்து இருந்தது.

    சென்னை தெருக்களை வெள்ளக்காடாக மாற்றிய அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை சென்னை அருகே கரையை கடந்து சென்றது. அந்த சமயத்தில் தரைகாற்று மிக பலமாக வீசியது. அதோடு பலத்த மழையும் பெய்தது.

    காற்றழுத்த மண்டலம் சென்னை அருகே கரையை நெருங்கியபோது சற்று வலுகுறைந்தது. இதன் காரணமாக அதி கனமழை அபாயத்தில் இருந்து சென்னை தப்பியது. இல்லையெனில் சென்னை நகரம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கக்கூடும்.

    என்றாலும் நேற்று 513 தெருக்கள் வெள்ளக்காடாக மாறின. அந்த தெருக்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிக்கி தவிக்க நேரிட்டது. மழைவெள்ளம் மிக அதிகமாக கரைபுரண்டு ஓடிய பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மக்கள் அதிக அளவில் தவிப்புக்கு உள்ளானார்கள்.

    சாலையில் தேங்கியுள்ள மழை நீர்

    இந்த நிலையில் மழை சேத பகுதிகளில் தேங்கி உள்ள தண்ணீரை அகற்றும் பணிகளில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள், பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் ஒருங்கிணைந்து தெருக்கள், முக்கிய சாலைகளில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியை தீவிரப்படுத்தினார்கள்.

    நேற்று இரவு முக்கிய சாலைகளில் தேங்கி நின்ற மழைவெள்ளம் ராட்சத பம்பு செட்டுகள் மூலம் வெளியேற்றப்பட்டன. சாலை மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கி உள்ள மழைநீரை அகற்ற 412 மின் மோட்டார்கள் மற்றும் 46 பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதனால் பெரும்பாலான முக்கிய சாலைகளில் இயல்பு நிலை நேற்று இரவே திரும்பியது.

    இதைத்தொடர்ந்து மற்ற பகுதிகளில் மழை நீரை அகற்றும் பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து மீட்பு குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    காற்றழுத்த மண்டலம் கரையை கடந்த பிறகு மழைப்பொழிவு கணிசமாக குறைந்தது. இதன் காரணமாக மீட்பு படையினர் நேற்று இரவே மழை நீரை அகற்றும் பணியில் அனைத்து பகுதிகளிலும் களம் இறங்கினார்கள். விடிய விடிய மழை நீர் அகற்றும் பணி நடந்தது.

    இன்று காலை சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. என்றாலும் தொடர்ந்து மழை நீர் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு முன்பு சென்னை நகரில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டபோது புறநகர் பகுதிகளில் தான் மிக மிக அதிக பாதிப்பு காணப்பட்டது.

    ஆனால் இந்த தடவை சென்னையில் அனைத்து இடங்களுமே வெள்ளக்காடாக மாறிவிட்டது. குறிப்பாக மத்திய சென்னை பகுதிகளிலும் அதிக அளவு தெருக்கள் மழைத்தண்ணீரில் மூழ்கின. இதன் காரணமாக மழைத்தண்ணீரை அனைத்து இடங்களிலும் ஒரே சமயத்தில் அகற்றுவது என்பது மாநகராட்சி ஊழியர்களுக்கும், பேரிடர் மீட்பு குழுவினருக்கும், தீயணைப்பு குழுவினருக்கும் கடும் சவாலாக இருந்தது.

    தண்ணீர் தேங்கிய 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை சுமார் 125 இடங்களில் தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டு இருந்தது. மீதமுள்ள சுமார் 300 இடங்களில் மழைநீரை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறு ஆகியவற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனாலும் தெருக்களில் தேங்கி உள்ள தண்ணீரை அகற்றுவது சவாலான பணியாக உள்ளது.

    சென்னையில் அடையாறு, இந்திரா நகர், தி.நகர், தரமணி, நங்கநல்லூர், புளியந்தோப்பு, திருவல்லிக்கேணி, மாம்பலம், கோடம்பாக்கம், சாலிகிராமம், சூளைமேடு, சூளை, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், முகப்பேர், கொளத்தூர், மயிலாப்பூர், எழும்பூர், ஆர்.கே.நகர். கே.கே.நகர் பகுதிகளில் அதிக பாதிப்பு காணப்பட்டதாக தெரியவந்துள்ளது. இன்று காலை முதல் இந்த பகுதிகளில் இயல்பு நிலை கொண்டுவருவதற்கான முயற்சிகளில் சிறப்பு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னையில் பலத்த மழை பெய்யத்தொடங்கியதில் இருந்து 253 மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. அவை அனைத்தும் உடனுக்குடன் அகற்றப்பட்டு விட்டன.

    சென்னையில் மொத்தம் 16 சுரங்கப்பாதைகள் இருக்கின்றன. அதில் 13 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் நிரம்பி வழிந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இன்று காலை முதல் சுரங்கப் பாதைகளில் தேங்கி இருந்த தண்ணீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதில் 7 சுரங்கப்பாதைகளில் இன்று மதியத்திற்குள் தண்ணீர் அகற்றப்பட்டது. மற்ற சுரங்கப்பாதைகளிலும் தண்ணீரை முழுமையாக அகற்றும் பணிகளும் நடந்து வருகின்றன. எனவே இந்த சுரங்கப்பாதைகள் வழியாக விரைவில் போக்குவரத்து தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் பலத்த மழை தொடங்கியதில் இருந்து தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்காக மாநகராட்சி சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இதுவரை சுமார் 7 லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 13 பொது சமையல் கூடங்களில் இந்த உணவுகள் தயாரித்து விநியோகிக்கப்பட்டன.

    250-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. என்றாலும் 68 இடங்களில் உள்ள நிவாரண முகாம்கள் மட்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இந்த முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் தஞ்சம் அடைந்தனர்.

    நேற்று சென்னையில் மிக பலத்த மழை பெய்தபோது 302 குழந்தைகள், 853 பெண்கள் உட்பட 2249 பேர் மீட்கப்பட்டனர். பாதுகாப்பான பகுதிகளில் அவர்கள் தங்கவைக்கப்பட்டனர். இன்று அவர்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள்.

    அதிக பாதிப்பு காணப்பட்ட பகுதிகளில் 48 படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் மட்டுமின்றி புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், முடிச்சூர், வரதராஜபுரம், மணிமங்கலம், பூந்தமல்லி, ஆவடி ஆகிய பகுதிகளிலும் மீட்பு பணிகள் நடத்தப்பட்டன.

    இந்த பகுதிகளிலும் தெருக்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி உள்ளது. அவற்றை அகற்றும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.


    Next Story
    ×