search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அய்யனார் சிலையையும், தாய்  தெய்வசிற்பத்தையும் படத்தில் காணலாம்.
    X
    அய்யனார் சிலையையும், தாய் தெய்வசிற்பத்தையும் படத்தில் காணலாம்.

    மங்கலம் அருகே 900 ஆண்டுகள் பழமையான அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு

    பூமலூர் கிராமத்தில் உள்ள பல்லடத்து அம்மன் எனும் பொன்காளியம்மன் கோவிலில் குடமுழுக்குப் பணிகளுக்காக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
    திருப்பூர்:

    திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த இடுவாய் நடராஜ், சு.வேலுசாமி, க.பொன்னுசாமி மற்றும் பொறியாளர் சு.ரவிகுமார் ஆகியோர் திருப்பூர் மங்கலம் அருகே பூமலூர் பூமலூர் கிராமத்தில் உள்ள பல்லடத்து அம்மன் எனும் பொன்காளியம்மன் கோவிலில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது 900 ஆண்டுகள் பழமையான அய்யனார் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. 

    இதுகுறித்து ஆய்வு மையத்தின் இயக்குநர் பொறியாளர் ரவிகுமார் கூறியதாவது:-

    பூமலூர் கிராமத்தில் உள்ள பல்லடத்து அம்மன் எனும் பொன்காளியம்மன் கோவிலில் குடமுழுக்குப் பணிகளுக்காக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்த பொன்.ராமகிருஷ்ணன் என்பவர் கொடுத்த தகவலின்பேரில் அந்த கோவில் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

    இதில் 70 செ.மீ.அகலமும், 80 செ.மீ. உயரமும் கொண்ட அய்யனார்சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிற்பத்தின் இரு பக்கங்களிலும் பூரணை புஷ்கலை என்னும் இரு தேவிகள் அமர்ந்த நிலையில் உள்ளனர். அய்யனாருக்கு மேலே பக்கத்துக்கு ஒருவராக இரு பணிப்பெண்கள் வெண்சாமரம் வீசும் நிலையில் உள்ளனர். இந்த அய்யனார் சிற்பம் சுமார் 900 ஆண்டுகள் பழமையானதாகும்.

    இந்தக் கோவில் வளாகத்தில் 80 செ.மீ.உயரமும், 90 செ.மீ அகலமும் கொண்ட தாய் தெய்வச்சிற்பம் பல்லக்கில் அமர்ந்து பயணிப்பதுபோல பல்லக்கு அமைப்பிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பக்கத்துக்கு 3 பேர் வீதம் மொத்தம் 6 பேர் பல்லக்கைச் சுமந்து செல்வது போலும் அவ்வாறு பயணிக்கும்போது பாதுகாப்புக்குச் செல்லும் வீரர்கள் வில், அம்பு ஏந்தியும் கையில் குறுவாள், ஈட்டி, அருவாள், சொட்டைமுனை ஆயுதம் போன்றவற்றைப் பிடித்த படியும் சிற்பங்கள் மூன்று பக்கங்களிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

    எழுத்துப் பொறிப்பு இல்லாத இச்சிற்பம் சுமார்600 ஆண்டுகள் பழமையானதாகும். மேலும் இங்கு கிடைக்கும் தொல்லியல் சான்றுகளான பெருங்கற்காலச் சின்னங்கள் மற்றும் கருப்பு சிவப்பு பானை ஓடுகளின் மூலமாகவும் பூமலூர் கிராமம் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றார். 
    Next Story
    ×