என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலம் உடைந்ததையடுத்து ஆற்றங்கரை சீரமைப்புபணி தீவிரமாக நடந்தபோது எடுத்த படம்
    X
    பாலம் உடைந்ததையடுத்து ஆற்றங்கரை சீரமைப்புபணி தீவிரமாக நடந்தபோது எடுத்த படம்

    அன்னவாசல் பகுதியில் பலத்த மழை: காரசூரான்பட்டி-பரம்பூர் சாலையில் பாலம் உடைந்தது

    அன்னவாசல் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக காரசூரான்பட்டி-பரம்பூர் சாலையில் பாலம் உடைந்தது. அதனை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் சமீப நாட்களாக மழை பெய்து வருகிறது. இதேபோல நேற்றும் பலத்த மழை பெய்தது. புதுக்கோட்டையை அடுத்த ஒட்டக்குளத்தில் நீர் நிரம்பியதை கலெக்டர் கவிதாராமு பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டை கூடல் நகர், பெரியார் நகர், ராஜகோபாலபுரம், கவிநாடு பகுதியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பார்வையிட்டார். அப்போது மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    அன்னவாசல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால், சேரனூர் கண்மாயில் இருந்து பெருக்கெடுத்த மழை வெள்ளத்தின் காரணமாக பரம்பூரில் இருந்து காரசூரான்பட்டி செல்லும் சாலையில் உள்ள பாலம் உடைந்து ஆற்றங்கரையை உடைத்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொக்லைன் எந்திரம் மூலம் கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    சத்தியமங்கலம் ஊராட்சி அண்ணாப்பட்டியில் மருதாகுளம் வாரியை சிலர் அடைத்து வைத்துக் கொண்டு திறக்க முடியாது என்று கூறுவதால் பல்வேறு குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதேபோன்று இலுப்பூர் நவம்பட்டி வல்லிகுளம் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அன்னவாசல் பகுதியில் விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. புதுக்குளம், பெரியகுளம் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. அன்னவாசல் பகுதிகளில் பல்வேறு குளங்களை சிலர் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு மீன் வளர்ப்பதாகவும், இதனால் மீன் வெளியே சென்றுவிடாமல் இருக்க பாலங்களில் வலை கொண்டு அடைத்துள்ளதால் அந்த வலையில் பல்வேறு கழிவுகள் அடைத்துக்கொண்டு தண்ணீர் செல்ல தடையாக உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கறம்பக்குடி அம்புக்கோவில் சாலையில் நரிகுறவர் காலனி குடிசைகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கறம்பக்குடி நகர தி.மு.க.வின் சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

    பெருங்களூர் கிராமத்திலிருந்து மங்களத்துப்பட்டி, மணவாத்திப்பட்டி, லெட்சுமாபுரம், பன்னிரண்டாம்பட்டி, குட்டகுளவாய்பட்டி, கூத்தாச்சிப்பட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலையில் காட்டுப்பட்டி அருகே தரைப்பாலம் உள்ளது. பலத்த மழையின் காரணமாக இந்த தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

    கீரமங்கலம் பகுதியில் தொடர் மழை காரணமாக கறம்பக்காடு இனாம் கிராமத்தில் தாளங்குளம் கரையோரம் பலர் குடிசை அமைத்து வசிக்கின்றனர். நேற்று பெய்த தொடர் மழையால் தாளங்குளம் ஏரியில் தண்ணீர் நிரம்புவதால் குடிசைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேற்பனைக்காடு கிராமத்தில் குடியிருப்பு பகுதியை சூழ்ந்த மழைத்தண்ணீர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கல்லணை கால்வாயில் திருப்பி விடப்பட்டது.

    இடைவிடாது பெய்த மழையால் கீரனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குளங்களில் உடைப்பு ஏற்பட்டு கீரனூர் பெரிய குளத்திற்கு வந்து சேர்ந்தது. ஆனால், தண்ணீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதைதொடர்ந்து பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு தண்ணீரை வெளியேற செய்தனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு கீரனூர் பெரியகுளம் நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

    கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் இருந்து புதுக்கோட்டை மற்றும் ஆலங்குடியிலிருந்து கீரமங்கலம் வழியாக பேராவூரணி, அறந்தாங்கி, மேற்பனைக்காடு ஆகிய ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கொத்தமங்கலம், குளமங்கலம், பனங்குளம், சேந்தன்குடி, நகரம், திருநாளூர் உள்பட பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் பள்ளி, கல்லூரி மாணவிகளும் கொத்தமங்கலம் வந்து பஸ் ஏறி சென்று வந்தனர். ஆனால், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் டவுன் பஸ்கள் இயக்கப்படாததால் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று தொடர்மழை காரணமாக தனியார் பஸ்சும் நிறுத்தப்பட்டதால் பல கிராம மக்களும் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    விராலிமலை ஒன்றியம் பேராம்பூர் பெரியகுளத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள மதகுகளை மாவட்ட வடகிழக்கு பருவமழை பாதிப்பு மற்றும் மீட்புக்கான கண்காணிப்பு அலுவலர் ஷம்பு கல்லோலிகர் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தினார். மேலும் பேராம்பூர் அணைக்கட்டு மற்றும் மதகுகள் புதிதாக கட்டுவதற்கு புதிய ஒப்பந்தம் விரைவில் கோரப்பட்டு பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குளத்தை சுத்தப்படுத்தி படகு குழாம் அமைத்து சுற்றுலாத்தலமாக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதேபோல விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது ஒன்றிய கவுன்சிலர் சத்தியசீலன் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், நல்லூர் ஊராட்சி, கீமனக்கண்மாய் மழையின் காரணமாக அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் கரையின் ஒரு பகுதி உடையும் தருவாயில் உள்ளது. இதனை, ஊராட்சி மன்ற தலைவர் ராமையா பார்வையிட்டு பொக்லைன் எந்திரம் மூலம் கரையை சீரமைக்க நடவடிக்கை எடுத்தார்.

    பொன்னமராவதி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலைச்சிவபுரி, வேந்தன்பட்டி, வார்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழையினால் நீர்நிலைகளில உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு கரையோரங்களில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு வருகின்றன. இதனை ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் வெங்கடேசன், சதாசிவம் மற்றும் தாசில்தார் ஜெயபாரதி உள்ளிட்டோர் வேகுப்பட்டி ஊராட்சி மற்றும் மேலைச்சிவபுரி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் பார்வையிட்டனர். இதேபோல அரிமளம் ஒன்றியத்திலும் குளம், கண்மாய் கரைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

    திருமயம் வட்டாரத்தில் தற்போது பெய்து வரும் வட கிழக்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட சம்பா நெல் பயிர்களின் சேத விவரங்களை குடுமியான்மலை ஸ்டாமின் இயக்குனர் சங்கரலிங்கம், விராச்சிலை மற்றும் அரசன்தம்பட்டி, லெம்பலகுடி ஆகிய வருவாய் கிராமங்களில் பார்வையிட்டார். அப்போது அவர், புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து ஏக்கருக்கு ரூ.465 பிரீமிய தொகை செலுத்தி இயற்கை இடர்பாடுகளிலிருந்து வருவாய் இழப்பினை தவிர்க்கலாம் என கேட்டுக்கொண்டார். அப்போது புதுக்கோட்டை வேளாண்மை துணை இயக்குனர் மோகன்ராஜ் மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் உமா, வேளாண்மை அலுவலர் புனிதவதி உள்பட பலர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×