search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் போயம்பாளையம் மாநகராட்சி பள்ளி வளாகம் சேறும் சகதியுமாக காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.
    X
    திருப்பூர் போயம்பாளையம் மாநகராட்சி பள்ளி வளாகம் சேறும் சகதியுமாக காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

    திருப்பூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை - பள்ளிகளுக்கு விடுமுறை

    மழைநீர் பல நாட்களாக தேங்கியுள்ளதால் டெங்கு பரப்பும் கொசு உற்பத்தி அதிகரிக்கும் அபாயம் உள்ளது
    திருப்பூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் பலத்த மழை பெய்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பரவலாக மழை பெய்தது.

    இதன் காரணமாக நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளன. அமராவதி அணையில் இருந்து ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.  

    இந்தநிலையில் நேற்று காலை முதல் மாலை வரை திருப்பூர் மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. இரவு 9மணிக்கு பிறகு லேசான தூரலுடன் மழை பெய்ய தொடங்கியது.  

    இந்த மழை இன்று காலை வரை தொடர்ந்து பெய்தது. இதன் காரணமாக  சாலைகளில் பள்ளமான இடங்களில் மழைதண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. சிதலமடைந்த சாலைகள் சேறும் சகதியுமாக மாறின. காலையில் பணிக்கு சென்ற தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.  

    ஏற்கனவே பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் வடியாத நிலையில் இரவு முதல் விடிய விடிய பெய்த மழையால் மேலும் தண்ணீர் தேங்கியது. தொடர் மழையால் திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.  

    தொடர் மழையால் உடுமலை, குடிமங்கலம் உள்ளிட்ட பகுதியில் விவசாய பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனம், புதுப்பாளையம் கிளை வாய்க்கால் பாசன பகுதியில் மக்காச்சோளம் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிரின் வளர்ச்சி தருணத்தில் இருந்து குறிப்பிட்ட இடைவெளியில், மழை பெய்து வருகிறது.

    தற்போது பயிர்கள் கதிர் பிடித்து அறுவடைக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் தொடர் மழையால் விளைநிலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கி பயிர்கள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

    மக்காச்சோள சாகுபடியில் படைப்புழு தாக்குதல் காரணமாக பயிர்கள் பாதித்தது. பல்வேறு மருந்துகளை தெளித்தும் நோய் கட்டுப்படவில்லை. புழு தாக்குதலால் அதிகளவு பயிர்கள் பாதித்தது. பாதிப்பில்லாத பயிர்கள் கதிர் பிடித்து அறுவடைக்கு தயாராகி வந்தது.

    இந்நிலையில் தொடர் மழையால் விளை நிலங்களில் பல நாட்களாக தண்ணீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் பயிர்கள் சாயும் அளவுக்கு பல அடி தண்ணீர் உள்ளது. எனவே  சாகுபடி முற்றிலுமாக பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. வேளாண்துறை வாயிலாக ஆய்வு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

    திருப்பூர் மாநகராட்சியை ஒட்டியுள்ள மங்கலம், முதலிபாளையம், இடுவாய், கணக்கம்பாளையம், பொங்குபாளையம் ஊராட்சிகளில் புதிய குடியிருப்புகள் அதிகம் உருவாகியுள்ளன. புதிய குடியிருப்பு பகுதிகளில் சாலை, மழைநீர் வடிகால் வசதி குறைவு. இதனால் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் குடியிருப்பு பகுதி களில் உள்ள மண் பாதையில் குட்டை போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. 

    மழைநீர் பல நாட்களாக தேங்கியுள்ளதால் டெங்கு பரப்பும் கொசு உற்பத்தி அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து ஆலோசித்து குடியிருப்புகளுக்கு மத்தியில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:

    திருப்பூர் வடக்கு-7,அவினாசி-4,பல்லடம்-4, ஊத்துக்குளி-6, காங்கேயம்-3.40, மூலனூர்-1, திருமூர்த்தி அணை-2, அமராவதி அணை-5, மடத்துக்குளம்-2, திருப்பூர் கலெக்டரேட்-5, வெள்ளகோவில் ஆர்.ஐ.. அலுவலகம்-5.20, திருமூர்த்தி அணை ஐபி-1,திருப்பூர்தெற்கு-4, கலெக்டர் கேம்ப் அலுவலகம்-5.80.
    Next Story
    ×