search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக மோசடி- 5 பேர் கைது

    அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மதுரை அரசு ஆஸ்பத்திரி கேஷியர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மதுரை:

    மதுரை ஐராவதநல்லூர் சிங்காரவேலன் தெருவை சேர்ந்தவர் பார்த்திபராமன். இவரிடம் மின் வாரிய துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, அதே பகுதியில் வசிக்கும் நாதன், அவரது மனைவி கிருஷ்ணவேணி, மகன் கணேசன், மகள் அம்பிகா ஆகியோர் வாக்குறுதி கொடுத்தனர்.

    இதனை நம்பிய பார்த்திப ராமன் அவர்களிடம் ரூ.12.15 லட்சத்தை கொடுத்தார். இதனை பெற்றுக்கொண்ட அவர்கள் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தை திருப்பித்தரவும் மறுத்துவிட்டனர். இது குறித்து பார்த்திபராமன் தெப்பகுளம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த சிலம்பரசன் மனைவி பொன்னிலா (31). இவரிடம் வருவாய் துறையில் வேலை வாங்கி தருவதாக மதுரை கீழவைத்தியநாதபுரம், பனைமேட்டு தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் (51), திருமங்கலம் ராமர், திருமங்கலம் சர்ச் தெரு சோனைமுத்து ஆகியோர் வாக்குறுதி கொடுத்தனர். இதனை நம்பிய பொன்னிலா ரூ.1 லட்சத்தை கொடுத்தார். இதனை பெற்றுக்கொண்ட அவர்கள் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தர மறுத்து விட்டனர். இது குறித்து பொன்னிலா செல்லூர் போலீசில் புகார் செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.

    மதுரை எஸ்.ஆலங்குளம், எஸ்.வி.பி. நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் (34). இவருக்கு ஏர்-இந்தியா நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி மதுரை, சுப்பிரமணியபுரம் சாந்தி, அவரது கணவர் மூர்த்தி, காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைபாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த யுவராஜ் (40) ஆகியோர் பொய் வாக்குறுதி கொடுத்தனர். இதனை நம்பிய ராஜேஷ், அவர்களிடம் ரூ. 8 லட்சத்தை கொடுத்தார். இதனை பெற்றுக்கொண்ட அவர்கள் வாக்குறுதி கொடுத்தபடி வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தர மறுத்து விட்டனர். இது குறித்து ராஜேஷ் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜை கைது செய்தனர்.

    மதுரை குலமங்கலம் பழனிச்சாமி மனைவி தமிழ்மொழி (26). இவரிடம் பரவை நந்தனார் தெருவைச் சேர்ந்த முனியாண்டி மகள் லதா, சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி காமராஜர் காலனி பாண்டிசெல்வம், மதுரை அரசு மருத்துவமனையில் கேஷியர் தங்கவேல் ஆகியோர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வேலை வாங்கித் தருவதாக, பொய்யாக வாக்குறுதி கொடுத்தனர்.

    இதனை நம்பிய தமிழ்மொழி, அவர்களிடம் ரூ.5 லட்சத்தை கொடுத்தார். இதனை பெற்றுக்கொண்ட அவர்கள் வாக்குறுதி கொடுத்தபடி வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தர மறுத்து விட்டனர். இது குறித்து தமிழ் மொழி மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து லதா, பாண்டிசெல்வம், தங்கவேல் ஆகியோரை கைது செய்தனர்.
    Next Story
    ×