search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி - ஊழியர் கைது

    காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஊழியர்களே பண மோசடி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதி நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவர் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் சூப்பிரண்டாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் மகன் மற்றும் உறவினர்களுக்கு வேலை தேடி வந்தார்.

    இந்த நிலையில் மதுரை காமராஜர் சாலை வடிவேல் நகரைச் சேர்ந்த சங்கர் (வயது 52), நாகமலை புதுக்கோட்டை பார்த்தசாரதி ஆகியோர் சக்திவேலை தொடர்பு கொண்டனர்.

    அப்போது சங்கர், “நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மொழி பெயர்ப்பாளராக வேலை பார்த்து வருகிறேன். என்னுடன் பார்த்தசாரதியும் பணிபுரிந்து வருகிறார்.

    எங்களுக்கு துணை வேந்தர் அலுவலக வட்டாரத்தில் அதிகாரிகள் பலரை தெரியும். பல்கலைக் கழகத்தில் கிளார்க், டைப்பிஸ்ட் பணியிடங்கள் காலியாக உள்ளன. நீங்கள் பணம் கொடுத்தால் உங்களது மகன் மற்றும் உறவினர்களுக்கு வேலை வாங்கி தருகிறோம்“ என்று ஆசைவார்த்தை கூறினர்.

    இதனை நம்பிய சக்திவேல் பணத்துடன் மதுரைக்கு வந்தார். அப்போது அவரை சங்கர், பார்த்தசாரதி ஆகியோர் மாவட்ட கோர்ட்டு அருகே சந்தித்தனர்.

    அப்போது சக்திவேல் அவர்களிடம் ரூ.13 லட்சத்து 90 ஆயிரத்தை கொடுத்தார். இதனை பெற்றுக் கொண்ட இருவரும் பல்கலைக் கழகத்தில் வேலை வாங்கித் தரவில்லை. எனவே சக்திவேல் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். அப்போது சங்கரும், பார்த்தசாரதியும் பணத்தை தராமல் இழுத்தடித்தனர். இதுகுறித்து மதுரை மாநகர போலீசில் சக்திவேல் புகார் செய்தார்.

    மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின்பேரில் மதுரை வடக்கு போலீஸ் துணை கமி‌ஷனர் ராஜசேகர், அண்ணாநகர் உதவி கமி‌ஷனர் சூரக்குமார் மேற்பார்வையில், அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தினர்.

    காமராஜர் பல்கலைக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சத்து 90 ஆயிரம் மோசடி செய்த பல்கலைக்கழக ஊழியர் சங்கரை போலீசார் கைது செய்தனர்.

    காமராஜர் பல்கலைக் கழகத்தில் பார்த்தசாரதி சில மாதங்களுக்கு முன்பு வரை வேலை பார்த்தார். அவரை பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்காலிக பணி நீக்கம் செய்தது.
    Next Story
    ×