search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழையால் வெள்ளக்காடான சாலை
    X
    மழையால் வெள்ளக்காடான சாலை

    தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த ஒரு வாரமாகவே விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினத்தில் இருந்து இடைவிடாது மழை கொட்டியது. நேற்று முன்தினம் இரவிலும், நேற்று காலையிலும் மிக பலத்த மழை பெய்தது. இன்று ஒரு சில இடங்கள் தவிர மற்ற இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

    சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்தது.

    மழை பாதிப்பு

    இந்நிலையில், தமிழகத்திற்கான மழை முன்னறிவிப்பு தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது:-

    தெற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கரையை நெருங்கக் கூடும். இதன் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

    திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, கோவை, கரூர், நாமக்கல், திருச்சி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 10 மற்றும் 11ஆம் தேதிகளில் கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்

    தமிழகத்திற்கு இயல்பை விட அதிக மழைப்பொழிவு கிடைத்துள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×