search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் ஜவகர்பஜாரில் பேரிகார்டு அமைத்து போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது எடுத்த படம்
    X
    கரூர் ஜவகர்பஜாரில் பேரிகார்டு அமைத்து போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது எடுத்த படம்

    அனுமதியில்லாமல் பட்டாசு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

    அனுமதியில்லாமல் பட்டாசு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    கரூர்:

    கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது பொதுமக்கள் தங்கள் வீடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது வீட்டில் உள்ள உடைமைகளின் பாதுகாப்பிற்கு ஒரு நபரையாவது வீட்டில் விட்டு செல்ல வேண்டும். பெண்கள் வெளியே செல்லும்போது விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவதை தவிர்க்க வேண்டும்.

    கூட்ட நெரிசலில் செல்லும்போது தாங்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களையும், வைத்திருக்கும் பொருட்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்கும்போது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி பட்டாசு வெடிக்கும் கால அளவான காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அனுமதித்த கால அளவை மீறி பட்டாசு வெடிக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    அனுமதியில்லாமல் பட்டாசுகள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் பெற்ற பட்டாசு விற்பனையாளர்கள் சரவெடிகளை தங்களது கடைகளில் பொதுமக்களுக்கு விற்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

    வடகிழக்கு பருவமழை காரணமாக காவிரி ஆறு மற்றும் அமராவதி ஆறுகளில் தற்சமயம் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் தீபாவளி பண்டிகையன்று பொதுமக்கள் நீர்நிலைகளில் சென்று குளிப்பதையும், ஆபத்தான பகுதிகளுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் ஜவகர்பஜாரில் குற்றத்தடுப்பு, பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி 24 மணிநேரமும் செயல்படும் சிறப்பு புறக்காவல் நிலையமும், 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களும், ஜவகர்பஜாரில் குற்றத்தடுப்பு உயர் கோபுரங்களும், ஆட்டோ மூலம் விளம்பரம் செய்யப்படுகிறது.

    மாவட்டத்தில் குற்றம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை நடைபெறாமல் இருக்க 20 இருசக்கர வாகன ரோந்தும், 12 நான்கு சக்கர வாகன ரோந்தும் சுழற்சி முறையில் இயங்கி வருகிறது. மாவட்டம் முழுவதும் முக்கிய சாலை சந்திப்பு, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வேகத்தை குறைக்க பேரிக்கார்டு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காவல்துறை கொடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியான முறையில் கடைப்பிடித்து விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×