search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி மாணவிகள்
    X
    பள்ளி மாணவிகள்

    புதுவையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை நவம்பர் 8-ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு

    புதுவையில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் நவம்பர் 8-ந்தேதி முதல் திறக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சரான நமச்சிவாயம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

    ஏற்கனவே புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் அரசு, தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12-ம் வகுப்புவரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

    தற்போது கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நவம்பர் 8-ந்தேதி முதல் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை அரைநாள் மட்டும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும்.

    பள்ளிகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் 6 நாட்கள் அரை நாள் மட்டும் சுழற்சி முறையில் இயங்கும். அதாவது, 1, 3, 5, 7-ம் வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 2, 4, 6, 8-ம் வகுப்புகள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் நடைபெறும். இப்போது மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படமாட்டாது.

    புதுச்சேரி அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பள்ளிகளில் பின்பற்றவேண்டும். தற்போது 90 சதவீதத்துக்கும் மேல் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துநிலை ஊழியர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை பள்ளி தலைமை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பெற்றோர் தங்களது சுய விருப்பத்தின்பேரில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பலாம். மாணவர்களுக்கு வருகைப்பதிவேடு கட்டாயமல்ல. பள்ளிக்கு வராத மாணவர்களின் நலன் கருதி தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்த பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மழலையர் பள்ளிகள் இப்போது திறக்கப்படாது.

    நகரப்பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், கிராமப்புற பகுதிகளில் காலை 9.30 மணிமுதல் மதியம் 1 மணிவரையிலும் பள்ளிகள் இயங்கும். மாணவர் சிறப்பு பஸ்களை இயக்க தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது. அதை இறுதிசெய்த பின்னர் மாணவர் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    9-ம் வகுப்புக்கு மேல் முழுநேரமும் வகுப்புகளை நடத்த பெற்றோரிடம் இருந்து கோரிக்கைகள் வருகின்றன. இதுதொடர்பாக பின்னர் முடிவு எடுக்கப்படும்.

    பள்ளிக்கட்டணம் குறித்து ஏற்கனவே அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. பள்ளிகளில் 75 சதவீத கட்டணமே வசூலிக்கவேண்டும். அதற்கு மேல் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுவைக்கு தனிக்கல்வி வாரியம் அமைக்க ஏற்கனவே ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதனை அமைப்பதுதான் அரசின் எண்ணம். அதற்கு போதிய நிதியில்லாததால் தனிக்கல்வி வாரியம் அமைக்கப்படாமல் உள்ளது.

    புதுவை பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் உள்ளூர் மாணவர்களுக்கு 25 சதவீத இடத்தை பெறுவது தொடர்பாக விரைவில் மத்திய கல்வி மந்திரியை சந்தித்து பேசுவேன். மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு பெறுவது தொடர்பாக முதல்-அமைச்சர் முடிவெடுப்பார்.

    இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

    பேட்டியின்போது கல்வித்துறை செயலாளர் அசோக்குமார், இயக்குனர் ருத்ரகவுடு, இணை இயக்குனர் சிவகாமி ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×