search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருக்குவளையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்த போது எடுத்த படம்.
    X
    திருக்குவளையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    நாளை முதல் நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் இயங்க நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி

    நாகை மாவட்டத்தில் நாளை முதல் நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் இயங்க நடவடிக்ைக எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் சக்கரபாணி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி டெல்டா மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் கஜா புயலின் போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த கால ஆட்சியின் போது சீரமைக்கப்படவில்லை. அவை அனைத்தும் தற்போதைய ஆட்சியில் சீரமைக்கப்படும் நாகை மாவட்டத்தில் 26 நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு சொந்த கடிடம் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்து சொந்த கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். நாகை மாவட்டத்துக்கு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் இயங்கக்கூடிய அரிசி அரவை ஆலை வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆலை நாகை மாவட்டத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். நாகை மாவட்டத்தில் 85 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. 65 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இது வரை 8 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நாளை(திங்கட்கிழமை) முதல் விவசாயிகளின் இருப்பிடத்துக்கு சென்று நெல் கொள்முதல் செய்யும் வகையில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடந்த 12 ஆண்டுகளாக நெல்லுக்கான ஆதரவு விலை உயர்த்தப்படவில்லை. தற்பொழுது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100 உயர்த்த உத்தரவிட்டுள்ளார். பொது ரக நெல்லுக்கு ரூ.75 உயர்த்தி வழங்கப்படும். நெல்லுக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் நெற்பயிரை அதிக அளவு சாகுபடி செய்து வருகின்றனர்.

    தமிழக அரசு விவசாயிகள் நலன் காக்கும் அரசாக உள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேவைக்கு ஏற்ப உலர் எந்திரம் அமைத்து தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கலெக்டர் அருண் தம்புராஜ், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் பாண்டியன், வேளாண்மை இணை இயக்குனர் பன்னீர்செல்வம், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், ஒன்றிய செயலாளர் தாமஸ்ஆல்வா எடிசன் மற்றும் பலர் இருந்தனர்.
    Next Story
    ×