search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சம்பள உயர்வு இழுபறி நீடிப்பால் திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் ஏமாற்றம் - கட்டண தொகை தாமதத்தால் ஜாப்ஒர்க் துறையினர் தவிப்பு

    வெளிமாநிலம், வெளிநாட்டு வர்த்தகரிடமிருந்து ஆர்டர் பெறும் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், ஜாப்ஒர்க் நிறுவனங்கள் மூலம் ஆடை தயாரித்து அனுப்பி வைக்கின்றன.
    திருப்பூர்:

    திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளருக்கு சம்பள உயர்வு வழங்க ஆடை உற்பத்தியாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்கத்தினர் மத்தியில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தற்போதைய சம்பளத்தில் இருந்து 90 சதவீதம் உயர்த்தி தர வேண்டுமென தொழிற்சங்கத்தினர் கூறுகின்றனர். 

    கடந்த ஆகஸ்டு 4-ந்தேதி முதல் கடந்த 10-ந்தேதி வரை இருதரப்பினரும் 6 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தொடக்கத்தில் 24 சதவீத சம்பள உயர்வு வழங்குவதாக தெரிவித்த உற்பத்தியாளர் சங்கத்தினர், அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளில் 28 சதவீதம் வரை வழங்க சம்மதித்தன. தொழிற்சங்கங்கள் இதற்கு உடன்படவில்லை.  

    கூடுதல் உயர்வு வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் 7-வது சுற்று சம்பள பேச்சுவார்த்தை, ‘சைமா’ சங்க அரங்கில் நடந்தது. பேச்சுவார்த்தை குழு தலைவர் துரைசாமி (ஏற்றுமதியாளர் சங்கம்) தலைமை வகித்தார். 

    சைமா, ஏற்றுமதியாளர் சங்கம், டீமா, நிட்மா, சிம்கா, டெக்மா ஆகிய 6 ஆடை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., ஏ.டி.பி., சங்கம், எம்.எல்.எப்., பி.எம்.எஸ்., எச்.எம்.எஸ்., எல்.பி.எப்., உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    உற்பத்தியாளர்கள், தொழில் நிலை சரியில்லை. 28 சதவீதத்துக்கு மேல் உயர்வு வழங்க முடியாது  என்றனர். சாய ஆலை மூடல், மின்வெட்டு பிரச்சினைகளால் தொழில் கடுமையாக பாதித்த காலங்களில் கூட சம்பள உயர்வு வழங்கப்பட்டது. அப்போதைவிட இப்போது தொழில் நிலை மோசமாக இல்லை. எனவே சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

    அப்போது உற்பத்தியாளர்கள் 2016-ல் போடப்பட்ட 33 சதவீத சம்பளத்தை எதிர்பார்க்கிறீர்களா? என உற்பத்தியாளர் சங்க தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு தொழிற்சங்கத்தினர்  நீங்களாக எப்படி முடிவு செய்யலாம். நாங்கள் அதைவிட அதிகமாக எதிர்பார்க்கிறோம் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

    இதையடுத்து மீண்டும் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது. வருகிற 28-ந்தேதி 8-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவது பனியன் நிறுவன தொழிலாளர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

    வெளிமாநிலம், வெளிநாட்டு வர்த்தகரிடமிருந்து ஆர்டர் பெறும்  திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், ஜாப்ஒர்க் நிறுவனங்கள் மூலம் ஆடை தயாரித்து அனுப்பி வைக்கின்றன. ஆடைக்கான தொகையை வர்த்தகர்கள் தங்களுக்கு வழங்கியபின்னரே, ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கு உரிய கட்டண தொகையை ஆடை உற்பத்தியாளர்கள் வழங்குகின்றனர்.

    வழக்கமாக ஓரிரு மாதங்களுக்குள் கட்டணம் வழங்கப்பட்டு விடும். கொரோனாவுக்குப்பின் கட்டண தொகையை வழங்க ஆடை உற்பத்தியாளர்கள் இழுத்தடிப்பதால் ஜாப்ஒர்க் துறையினர் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து சாய ஆலை உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் முருகசாமி கூறியதாவது:

    பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து சாய ஆலைகளுக்கு ஆர்டர் வருகை அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரம் ஜாப்ஒர்க் கட்டண தொகைகளை வழங்க 4 முதல் 5  மாதங்கள் வரை இழுத்தடிக்கின்றனர். சாய ஆலைகள் மட்டுமல்ல, நிட்டிங், பிளீச்சிங், பிரின்டிங் என அனைத்து ஜாப்ஒர்க் துறையினரும் இப்பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.

    கொரோனாவுக்குப்பின் ஜாப்ஒர்க் நிறுவனங்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. கட்டணம் வழங்க தாமதிப்பதால் அடுத்தடுத்த ஆர்டர்களை கையாளுவது சிக்கலாகிறது. ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கு நிதிச்சுமை மேலும் அதிகரிக்கிறது. 

    நெருக்கடியான இந்த சூழலை கருத்தில் கொண்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் அதிகபட்சம் 90 நாட்களுக்குள் கட்டண தொகைகளை வழங்கி ஜாப்ஒர்க் துறையினருக்கு கைகொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×