search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 15 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

    பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும், வேலூர் அப்துல்லாபுரத்தை சேர்ந்தவருக்கும் நேற்று திருமணம் நடக்க இருந்தது. அதை சமூக நலத்துறை அலுவலர்கள் தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டனர்.
    வேலூர்:

    வேலூர் ஒருகிணைந்த மாவட்டத்தில் பல இடங்களில் குழந்தை திருமணம் நடக்க உள்ளதாக மாவட்ட சமூகநலத்துறை அலுவலர்களுக்கு கடந்த 2 நாட்களாக தொடர்ந்து தகவல் வந்தது.

    இதையடுத்து மாவட்ட சமூக நல அலுவலர் முருகேஸ்வரி உத்தரவின்பேரில், சைல்டு லைன் அமைப்பினர், சமூக நல அலுவலர்கள் மற்றும் போலீசார் இணைந்து தகவல் வந்த இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் காட்பாடியை சேர்ந்த 16 வயது சிறுமி 11-ம் வகுப்பு படிக்கிறார். இவருக்கும் கே.வி. குப்பம் பகுதியை சேர்ந்த தினகரன் என்ற வாலிபருக்கும் காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது.

    அதை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதேபோல் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும், வேலூர் அப்துல்லாபுரத்தை சேர்ந்த ஸ்டீபன் என்பவருக்கும் நேற்று திருமணம் நடக்க இருந்தது. அதை சமூக நலத்துறை அலுவலர்கள் தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டனர்.

    இதன்படி கடந்த 2 நாட்களில் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் வேலூர் 3,திருப்பத்தூர் 8,ராணிப்பேட்டை 4 என மொத்தம் 15 இடங்களில் நடக்கவிருந்த குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது என்றும் சம்பந்தப்பட்ட சிறுமிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    Next Story
    ×